IPL TAMILTAMIL

‘ஆட்டநாயகன் விருதை மறைந்த தாயாருக்கு அர்ப்பணிக்கிறேன்’ ஐதராபாத் வீரர் ரஷித்கான் உருக்கம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது.

இதில் ஐதராபாத் நிர்ணயித்த 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து அடங்கியது.

4 ஓவரில் 14 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்து அசத்திய ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

விருதை பெற்ற போது உணர்ச்சி வசப்பட்ட ரஷித்கான் கண் கலங்கினார். அப்போது அவர் கூறும் போது, ‘கடந்த ஒன்றரை ஆண்டுகள் எனக்கு மிகவும் கடினமான காலக்கட்டமாக அமைந்தது.

முதலில் எனது தந்தையை இழந்தேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக எனது தாயார் மறைந்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனது ஆட்டத்தின் தீவிர ரசிகை என்னுடைய அம்மா தான்.

நான் ஆட்டநாயகன் விருது பெறும் ஒவ்வொரு முறையும் அன்று இரவு முழுவதும் நீண்ட நேரம் என்னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பார்.

அவர் இல்லாதது கடினமானதாகும். இந்த ஆட்டநாயகன் விருதை எனது தாயாருக்கு அர்ப்பணிக்கிறேன்.’ என்றார்.

ரஷித்கான் மேலும் கூறுகையில், ‘கேப்டன் வார்னர் எனக்கு எப்பொழுதும் ஆதரவு அளிப்பதுடன் சுதந்திரமாக செயல்பட அனுமதித்து இருக்கிறார். எனது பந்து வீச்சு சரியாக எடுபடவில்லை என்றால் மட்டுமே அவரிடம் ஆலோசனை கேட்பேன். தாக்கத்தை உருவாக்கியாக வேண்டும் என்று எனக்குள் நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ளமாட்டேன். பதற்றமின்றி பொறுமையுடன் என்ன செய்ய வேண்டுமோ அதில் கவனம் செலுத்துவேன்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker