CRICKETLATEST UPDATESNEWSTAMIL

அஸ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட் வீழ்த்த முடியும் – இலங்கை முன்னாள் வீரர் முரளீதரன் நம்பிக்கை

டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் ‘டாப்-3’ வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்களே உள்ளனர்.

இலங்கையை சேர்ந்த முத்தையா முரளீதரன் 133 டெஸ்டில் 230 இன்னிங்சில் விளையாடி 800 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். அவர் 2010-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

முரளீதரனுக்கு அடுத்த படியாக வார்னே (ஆஸ்திரேலியா) 273 இன்னிங்சில் 708 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்திலும், இந்தியாவை சேர்ந்த கும்ப்ளே 236 இன்னிங்சில் 619 விக்கெட்டுகள் எடுத்து 3-வது இடத்திலும் உள்ளனர்.

இதற்கு அடுத்த நிலையில் தான் வேகப்பந்து வீரர்கள் உள்ளனர். ஆண்டர்சன் (இங்கிலாந்து) 600 விக்கெட்டும், மெக்ராத் (ஆஸ்திரேலியா) 563 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

இந்த நிலையில் தற்போதுள்ள சுழற்பந்து வீரர்களில் அஸ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று முரளீதரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்றில் அவர் கூறியதாவது:-

கிரிக்கெட் உலகில் இன்றுள்ள சுழற்பந்து வீரர்களில் 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உள்ளவராக நான் இந்திய வீரர் அஸ்வினை மட்டும் பார்க்கிறேன்.

சென்னையை சேர்ந்த அஸ்வின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர். அவரைத் தவிர்த்த மற்ற இளம் பந்துவீச்சாளர்கள் யாரும் அந்த சாதனையை நிகழ்த்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனால்கூட இந்த சாதனையை நிகழ்த்த முடியாது. அவர் மீது நம்பிக்கை இல்லை.

நான் விளையாடும் போது சமநிலை இருந்தது. ஆனால் இன்று ஒருநாள், 20 ஓவர் போட்டிகள் வந்தபிறகு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கிரிக்கெட் மாறிவிட்டது.

அப்போது ஆடுகளம் நன்றாக தட்டையாக அமைக்கப்படும். பந்து வீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் சம அளவு ஒத்துழைக்கும். தற்போதுள்ள நிலையில் பவுலர்கள் நேர்த்தியாக நீண்ட நேரம் வீசினால்தான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.

வேகபந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீரர்களால் தான் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும். ஆனால் பீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவதும், கடினமாக உழைப்பதும் அவசியம்.

இவ்வாறு முரளீதரன் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker