TAMIL

அஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி : இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து, 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடந்து வருகிறது.

தொடரை கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

போட்டியின் ஐந்தாவது ஓவரில் பிஞ்ச் அடித்த பந்தை தாவி பிடிக்க முயன்ற போது கையில் காயம் ஏற்பட்டதால் ஷிகர் தவான் தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார்.

இந்திய அணியின் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.

தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 3 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 19 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக ஸ்மித்-லபுஸ்சேன் ஜோடி நிலைத்து நின்று ஆடி இருவரும் அரைசதத்தை கடந்தனர்.

லபுஸ்சேன் 54 ரன்களில் ஜடேஜா வீசிய பந்தில் கேட்ச் ஆனார். மிட்சேல் ஸ்டார்க் ரன் ஏதுமின்றி வந்த வேகத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி 35 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆஷ்டன் டர்னர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.



ஆடம் ஜம்பா, கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு ரன் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினர். நிலைத்து நின்று ஆடிய ஸ்டீவன் ஸ்மித்(14 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) சதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

முகமது சமி வீசிய பந்தில் ஸ்மித்(131 ரன்கள்) ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் ஆனார்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது.

ஆஷ்டன் அகர் மற்றும் ஜான் ஹேசில்வுட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து இந்திய அணி 287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker