TAMIL
அமெரிக்க முன்னாள் கூடைப்பந்து வீரர் மறைவுக்கு தெண்டுல்கர், விராட்கோலி உள்பட விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்
அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய கூடைப்பந்து சங்க (என்.பி.ஏ.) போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக
20 ஆண்டுகளாக விளையாடி தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் அதிக புள்ளிகள் குவித்து ரசிகர்களின் உள்ளத்தில் நீங்கா இடத்தை பிடித்தவர் கோபே பிரையன்ட்.
2016-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற அமெரிக்க கூடைப்பந்து வீரரான (வயது 41) அவர் தனது மகள் ஜியானாவை போட்டியில் பங்கேற்க (வயது 13) லாஸ் ஏஞ்சல்சில் இருந்து ஹெலிகாப்டரில் அழைத்து சென்ற போது நேர்ந்த விபத்தில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை பரிதாபமாக பலியானார்.
அந்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க கூடைப்பந்து அணியில் 2 முறை (2008, 2012) அங்கம் வகித்தவரும் 18 முறை என்.பி.ஏ. ஆல் ஸ்டார் பட்டம் வென்றவருமான கோபே பிரையன்ட் மறைவுக்கு அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தனது இரங்கல் பதிவில், ‘இந்த செய்தி எனது மனதை பாழாக்கி விட்டது.
சிறுவயதில் அதிகாலையில் எழுந்து அவர் களத்தில் நிகழ்த்தும் சாகசங்களை பார்த்த விஷயங்கள் நினைவுக்கு வருகிறது.
வாழ்க்கை கணிக்க முடியாததாகவும், நிலையற்றதாகவும் இருக்கிறது. மகளுடன் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த செய்தி மனதை உடைத்து விட்டது.
அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், ‘கோபே பிரையன்ட், அவரது மகள் மற்றும் சிலர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பதிவில், ‘கோபே மற்றும் அவரது மகள் இறந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
பலருக்கும் உத்வேகம் அளித்த அவர் ஒரு சகாப்தம்.
இந்த விபத்தில் பலியான அனைவரது குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது இரங்கல் பதிவில், ‘விளையாட்டு உலகுக்கு இது மோசமான நாள்.
கூடைப்பந்தின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவர் விரைவில் போய் விட்டார்.
கோபே பிரையன்ட் அவரது மகள் ஜியானா மற்றும் விபத்தில் உயிரிழந்த அனைவரின் ஆன்மாவும் சாந்தியடையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே, தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா, வெஸ்ட்இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், இந்திய முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ்சிங், முகமது கைப், வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சேமி, இந்திய வீரர்கள் ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் அய்யர், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்பட பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.