CRICKETLATEST UPDATESNEWSTAMIL
அமெரிக்காவில் கிரிக்கெட் அணியை வாங்கும் பிரபல நடிகர்
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த 6 அணிகள் பங்கேற்கும் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) என்ற பெயரில் 20 ஓவர் லீக் போட்டி 2022-ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை ஜூகி சாவ்லா ஆகியோரை உரிமையாளராக கொண்ட தி நைட் ரைடர்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. போட்டியை நடத்தும் அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் நைட் ரைடர்ஸ், போட்டியின் வளர்ச்சிக்கும், அதை முன்னெடுத்து செல்லவும் பல்வேறு ஆலோசனைகளையும், திட்டங்களையும் வகுத்து கொடுக்க உள்ளது. அத்துடன் நைட் ரைடர்ஸ் நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வாங்கி நிர்வகிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நைட் ரைடர்ஸ் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில், ‘அமெரிக்காவில் அடுத்த சில ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த 6 கிரிக்கெட் மைதானங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். சர்வதேச போட்டிகளையும், உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளையும் அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்பதே குறிக்கோளாகும். இங்கு விளையாட்டுக்குரிய நல்லசூழல் நிலவுகிறது’ என்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், வெஸ்ட் இண்டீசில் நடக்கும் சி.பி.எல். கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளராக உள்ள ஷாருக்கான் இப்போது அமெரிக்க கிரிக்கெட்டிலும் கால்பதிக்கிறார்.