TAMIL
அடுத்த ஆண்டு நடக்கும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு
8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை நியூசிலாந்தில் 6 இடங்களில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன.
எஞ்சிய 4 அணிகள் எவை என்பது பெண்களுக்கான சாம்பியன்ஷிப் மற்றும் இலங்கையில் ஜூலை மாதம் நடக்கும் தகுதி சுற்று முடிவில் தெரியவரும்.
இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி பிப்ரவரி 6-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, தகுதி சுற்று மூலம் வரும் அணியை எதிர்கொள்கிறது.
சமீபத்தில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் அரைஇறுதி சுற்று மழையால் பாதிக்கப்பட்ட போது
மாற்று நாள் (ரிசர்வ் டே) இல்லாதது வீராங்கனைகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதை கருத்தில் கொண்டு இந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டிக்கு மாற்று நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.