14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டிகளுக்காக வீரர்கள் தயாராகி வரும் நிலையில், வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் போட்டி ஏற்பாட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், போட்டிகள் நடைபெறும் அனைத்து நகரங்களையும் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதுபற்றி பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே ஐபிஎல் போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பிசிசிஐ எடுத்துள்ளது. போட்டிகள் 6 இடங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன.
பயோ பபுள் எனப்படும் பாதுகாப்பு விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அணியின் வீரர்களும் அதிகரிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் இன்றி போட்டி நடக்கும். வீரர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். இதுதொடர்பாக சுகாதார அமைச்சகத்துடன் பிசிசிஐ அதிகாரிகள் தொடர்புகொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.