TAMIL
லாரியஸ் அமைப்பின் உலகின் சிறந்த வீரர் விருதுக்கு ஹாமில்டன், மெஸ்சி தேர்வு சிறந்த தருணத்துக்கான விருதை தெண்டுல்கர் பெற்றார்
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு லாரியஸ் அமைப்பு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
லாரியஸ் அமைப்பின் 20-வது ஆண்டு விருது வழங்கும் விழா ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
கடந்த 20 ஆண்டுகளில் (2000 முதல் 2020-ம் ஆண்டு வரை) உலகின் சிறந்த விளையாட்டு தருணங்கள் விருதுக்கான போட்டியில்
மும்பையில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை
கைப்பற்றியதும், சச்சின் தெண்டுல்கரை சக வீரர்கள் தோளில் சுமந்தபடி மைதானத்தில் வலம் வந்த காட்சியும் இடம் பெற்று இருந்தது.
இந்த காட்சிக்கு வீரர், வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து அதிக வாக்குகள் கிடைத்ததால், கடந்த 20 ஆண்டுகளில்
விளையாட்டின் சிறந்த தருணத்துக்கான விருதுக்கு தெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார்.
இதனை முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் விழா மேடையில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து இந்த விருதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், தெண்டுல்கருக்கு வழங்கினார்.
விருதை பெற்ற பிறகு தெண்டுல்கர் பேசுகையில், ‘உலக கோப்பையை வென்றது வியக்கத்தக்க தருணமாகும்.
அந்த வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
அந்த வெற்றியை எந்தவித பாகுபாடுமின்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடியது.
இது விளையாட்டு எவ்வளவு வலுவானது, அது நமது வாழ்வில் எத்தனை அற்புதங்களை நிகழ்த்தும் என்பதை நினைவூட்டுவதாகும்.
இப்போதும் அந்த சம்பவம் எனது மனதில் பசுமையாக நிலைத்து இருக்கிறது.’ என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட போரிஸ் பெக்கர், அந்த தருணத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகளை பகிருமாறு கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து தெண்டுல்கர் பேசுகையில் கூறியதாவது:-
எனக்கு 10 வயதாக இருக்கையில், 1983-ம் ஆண்டில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினேன். அந்த ஆண்டில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது.
அப்போது அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியாது. எல்லோரையும் போல் நானும் வெற்றியை கொண்டாடினேன்.
ஆனால் அது நாட்டுக்கு ஒரு சிறப்பான தருணமாக இருக்கும் என்பதை மட்டும் உணர்ந்தேன்.
அதனை நானும் ஒருநாள் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அது தான் எனது கிரிக்கெட் பயணத்தின் தொடக்கமாகும்.
நாட்டுக்காக உலக கோப்பையை கையில் ஏந்தியது எனது வாழ்க்கையில் மிகவும் பெருமைக்குரிய தருணமாகும்.
22 ஆண்டுகள் துரத்தலுக்கு பிறகே எனது கனவு நிறைவேறியது.
இருப்பினும் நான் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை.
தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் அவரது தலைமையை பாதிக்கவில்லை.
அவர் நமக்காக விட்டுச் சென்ற பல செய்திகளில் விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
தற்போது இந்த அறையில் நிறைய வீரர்கள் அமர்ந்து இருக்கிறார்கள்.
இதில் சிலருக்கு எல்லா வசதிகளும் கிடைத்து இருக்காது.
இருப்பினும் அவர்கள் தங்களிடம் இருந்த திறமையை சரியாக பயன்படுத்தி வெற்றி அடைந்துள்ளனர்.
இளைஞர்கள் விளையாட்டை தேர்வு செய்ய உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்த விருது எல்லாருக்குமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, பார்முலா1 கார்பந்தய
சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இருவரும் சமமான வாக்குகள் பெற்று இருந்தனர். சிறந்த வீரர் விருதை சம வாக்குகள் பெற்று இருவர் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
சிறந்த வீராங்கனை விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பில்ஸ் தட்டிச் சென்றார்.
அவர் 3-வது முறையாக இந்த விருதை பெற்றுள்ளார்.
பார்முலா3 கார் பந்தயத்தின் போது விபத்தில் சிக்கி மீண்டு வந்து போட்டியில் பங்கேற்று வரும் ஜெர்மனியை சேர்ந்த 18 வயது
வீராங்கனையான சோபியா பிளோர்ஷ், பின்னடைவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கான சிறந்த வீராங்கனை விருதை கைப்பற்றினார்.