TAMIL
ரோகித் சர்மாவின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா
இந்தியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்ட ஜார்கண்டை சேர்ந்த 30 வயதான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம், சர்வதேச அரங்கில் புதுமுக வீரராக இடம் பிடித்தார்.
தென்ஆப்பிரிக்க அணியில் 5 மாற்றமாக காயமடைந்த மார்க்ராம், கேஷவ் மகராஜ் மற்றும் செனுரன் முத்துசாமி, வெரோன் பிலாண்டர், டி புருன் ஆகியோர் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜூபைர் ஹம்சா, டேன் பீட், நிகிடி, விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென், இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜார்ஜ் லின்டே ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதில் கிளாசென், ஜார்ஜ் லின்டே ஆகியோருக்கு இது அறிமுக டெஸ்ட் போட்டியாகும்.
தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர்.
பொதுவாக இந்திய ஆடுகளங்களில் முதல் ஒரு மணி நேரம் பந்து வீச்சு எடுபடும். அந்த பகுதியில் மட்டும் பேட்ஸ்மேன்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது முக்கியமாகும். இந்த டெஸ்டிலும் ஆரம்பத்தில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டினர். குறிப்பாக காஜிசோ ரபடா, துல்லியமான தாக்குதலோடு ‘ஸ்விங்’ செய்து திணறடித்தார். அவரது பந்து வீச்சில் மயங்க் அகர்வால் (10 ரன்) ஸ்லிப்பில் நின்ற டீன் எல்கரிடம் பிடிபட்டார். அடுத்து வந்த புஜாரா (0) அவரது பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் விரலை உயர்த்தவில்லை. பிறகு தென்ஆப்பிரிக்க வீரர்கள் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது பந்து ஸ்டம்பை தாக்குவது உறுதியானதால், புஜாரா வெளியேற்றப்பட்டார். உள்நாட்டில் புஜாரா டக்-அவுட் ஆவது இது 2-வது முறையாகும்.
இதன் பின்னர் கேப்டன் விராட் கோலி வந்தார். ரோகித் சர்மா 7 ரன்னில் இருந்த போது ரபடாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் தீர்ப்பளித்தார். உடனடியாக ரோகித் சர்மா அப்பீல் செய்தார். டி.வி. ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசிக்கொண்டு அதன் பிறகே காலுறையில் படுவது தெரிந்ததால் ரோகித் சர்மா தப்பித்தார்.
முந்தைய டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி (12 ரன், 22 பந்து, 2 பவுண்டரி) இந்த முறை நிலைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் நார்ஜே முதல் 2 பந்துகளை ஆப்-ஸ்டம்புக்கு வெளியே வீசி விட்டு 3-வது பந்தை ஸ்டம்புக்குள் போட்டார். தடுமாற்றத்திற்கு உள்ளான கோலி எல்.பி.டபிள்யூ.-வில் சிக்கினார். இதனால் கோலி டி.ஆர்.எஸ். கேட்டார். ரீப்ளேயில் பந்து லெக்ஸ்டம்பை லேசாக தட்டுவது தெரிந்தது. இதையடுத்து, ‘நடுவர் முடிவு’ என்ற அடிப்படையில் கோலி ஏமாற்றத்துடன் நடையை கட்டினார்.
அப்போது இந்திய அணி 39 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை தாரைவார்த்து தத்தளித்தது. இந்த நெருக்கடியான கட்டத்தில் ரோகித் சர்மாவுடன், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே கைகோர்த்தார். இருவரும் படிப்படியாக அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.
ரோகித் சர்மாவும், ரஹானேவும் தங்களை நிலை நிறுத்திக்கொண்ட பிறகு எத்தகைய பந்து வீச்சையும் அடித்து நொறுக்கினர். முதலில் அச்சுறுத்திய ரபடாவின் ஒரே ஓவரில் ரஹானே 3 பவுண்டரிகளை சாத்தினார். அவரது இன்னொரு ஓவரில் இருவரும் சேர்ந்து 3 பவுண்டரிகள் ஓட விட்டனர். இதே போல் ஜார்ஜ் லின்டே, டேன் பீட் ஆகியோரின் சுழற்பந்து வீச்சையும் துவம்சம் செய்தனர்.
டேன் பீட்டின் ஓவரில் 2 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா 90 ரன்களை தாண்டிய பிறகு ஷேவாக் பாணியில் மேலும் ஒரு சிக்சரை பறக்க விட்டு அட்டகாசமாக சதத்தை நிறைவு செய்தார். இது அவரது 6-வது சதமாகும். நடப்பு தொடரில் எட்டிய 3-வது சதமாகும். தனது முதல் 23 ரன்களை 55 பந்துகளில் எடுத்த ரோகித் சர்மா அடுத்த 78 ரன்களை 75 பந்துகளில் கொண்டு வந்து பிரமிக்க வைத்தார். மறுமுனையில் ரஹானே அரைசதத்தை கடந்து ரன்வேட்டையை தொடர்ந்தார். இந்த கூட்டணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிட்டவில்லை.
இந்திய அணி 58 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 224 ரன்கள் சேர்த்து இருந்த போது கருமேகம் திரண்டு போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மழையும் கொட்டியதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மழையால் 32 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது.
ரோகித் சர்மா 117 ரன்களுடனும் (164 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்), ரஹானே 83 ரன்களுடனும் (135 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் நிற்கிறார்கள். இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு இதுவரை 185 ரன்கள் சேர்த்து உள்ளனர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய ஜோடி 4-வது விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்சம் இதுவாகும். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
ஒரே தொடரில் அதிக சிக்சர் அடித்து ரோகித் சர்மா உலக சாதனை
* ராஞ்சியில் நேற்று தொடங்கிய கடைசி டெஸ்டில் இந்திய வீரர் ரோகித் சர்மா 4 சிக்சர்கள் விளாசினார். இதையும் சேர்த்து இந்த தொடரில் அவரது சிக்சர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக சிக்சர்களை நொறுக்கிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் 15 சிக்சர் எடுத்ததே சாதனையாக இருந்தது.
* டெஸ்டில் இந்த ஆண்டில் அதிக சிக்சர் விரட்டியவர்களின் பட்டியலிலும் 32 வயதான ரோகித் சர்மாவே (4 இன்னிங்சில் 17 சிக்சர்) ‘நம்பர் ஒன்’ ஆக இருக்கிறார். 2-வது இடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (16 இன்னிங்சில் 15 சிக்சர்) உள்ளார்.
* விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் கண்ட இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இந்த டெஸ்டிலும் சதத்தை ருசித்துள்ளார். டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய தொடக்க வீரர் இரண்டுக்கு மேல் சதம் அடிப்பது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக சுனில் கவாஸ்கர் 1978-79-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி 4 சதங்கள் அடித்திருந்தார். அது மட்டுமின்றி இச்சாதனையை கவாஸ்கர் 3 முறை செய்து இருக்கிறார். அதே சமயம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு தொடரில் 3 சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர் ரோகித் சர்மா தான்.
* நடப்பு தொடரில் ரோகித் சர்மா இதுவரை 434 ரன்கள் குவித்துள்ளார். இதன்படி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த இந்தியராக வலம் வருகிறார். இதற்கு முன்பு இச்சிறப்பை முகமது அசாருதீன் (1996-ம் ஆண்டு தொடரில் 388 ரன்கள்) வைத்திருந்தார்.
* இந்த டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ஜே சாய்த்தார். இது அவரது முதல் டெஸ்ட் விக்கெட்டாகும். கோலியின் விக்கெட் ஒரு பவுலருக்கு முதல் விக்கெட்டாக அமைவது இது 4-வது நிகழ்வாகும். ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவின் ரபடா, செனுரன் முத்துசாமி, வெஸ்ட் இண்டீசின் அல்ஜாரி ஜோசப் ஆகியோரும் தங்களது முதல் டெஸ்ட் விக்கெட்டாக கோலியையே வீழ்த்தி இருந்தனர்.