ஐபிஎல் போட்டி அறிமுகமான ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். அதன்பின் அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் செயல்பட்டார். அவரது பேட்டிங் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகைக்கு ஏலம் போனாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2021 சீசனை எதிர்கொள்கிறது.
கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் ‘‘நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமான மாறுபட்ட சிந்தனை எனது மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதை எளிதாக எடுத்துக் கொள்வேன். இந்த பணியை எடுத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையிலேயே, கடந்த வருடம் வரை நான் கேப்டனாக பணியாற்றுவேன் என்று நினைக்கவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டைரக்டராக இலங்கை ஜாம்பவான் சங்கக்கரா நியமிக்கப்பட்டுள்ளார். சங்கக்கரா என்றாலே, என் நினைவுக்கு வருவது அவரது கவர் டிரைவ், அவரது பேட்டிங்கை மிகவும் விரும்புவேன். அவரை போன்ற ஜாம்பவான் உடன் இணைந்து பணியாற்றுவன் மூலம் கனவு நினைவானது போன்றது’’ என்றார்.