TAMIL

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது.

அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

சிட்னியில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதியது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஸ்மிர்தி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் முதல் 4 ஓவர்களில் 40 ரன்களை திரட்டி சூப்பரான தொடக்கம் தந்தனர்.

ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ரன்வேகம் வெகுவாக தளர்ந்தது. மந்தனா 10 ரன்னிலும், ஷபாலி வர்மா 29 ரன்களிலும் (15 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இதன் பின்னர் ஜெமிமா ரோட்ரிக்சும் (26 ரன்), தீப்தி ஷர்மாவும் (நாட்-அவுட், 46 பந்துகளில் 49 ரன்) அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினர்.

20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களம் புகுந்த ஆஸ்திரேலிய அணியில் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி அதிரடி காட்டினார்.

மறுமுனையில் பெத் மூனி (6 ரன்), கேப்டன் மெக் லானிங் (5 ரன்) வரிசையாக நடையை கட்டியதால் அந்த அணி தடுமாற்றத்துக்குள்ளானது.

வேகப்பந்து வீச்சை சிரமமின்றி சமாளித்த ஆஸ்திரேலிய வீராங்கனைகள், சுழற்பந்து வீச்சில் குறிப்பாக பூனம் யாதவின் சுழல் ஜாலத்தில் தள்ளாடினர்.அலிசா ஹீலி (51 ரன், 35 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) பூனம் யாதவின் பந்து வீச்சில் அவரிடமே பிடிபட்டார்.

ஆஸ்திரேலிய வீராங்கனை அடித்த பந்தை எல்லைக்கோடு அருகே பாய்ந்து விழுந்து தடுத்த இந்திய வீராங்கனை மந்தனா இடது தோள்பட்டையில் சிறிது நேரம் வலியால் அவதிப்பட்டார்.

அந்த காட்சிகளை படத்தில் காணலாம்.

தொடர்ந்து ராச்சல் ஹெய்ன்ஸ் (6 ரன்), எலிஸ் பெர்ரி (0) அவரது சுழல் வலையில் அடுத்தடுத்து சிக்கினர். இதனால் பூனம் யாதவுக்கு ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் வாய்ப்பு உருவானது.

அடுத்த பந்தை எதிர்கொண்ட ஜெஸ் ஜோனசென் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் தனியா பாட்டியா வீணடித்ததால் ‘ஹாட்ரிக்’ சாதனை நழுவியது.

இருப்பினும் ஜோனசென் (2 ரன்) பூனம் யாதவின் அடுத்த ஓவரில் ஆட்டம் இழந்தார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி முற்றிலும் நிலைகுலைந்து ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.

அணியை கரைசேர்க்க இறுதி வரை போராடிய ஆஷ்லி கார்ட்னெர் (34 ரன்) கடைசி ஓவரில் வீழ்ந்தார்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 115 ரன்களில் சுருண்டது.

அந்த அணியில் 8 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இதன் மூலம் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த உலக கோப்பை போட்டியை அட்டகாசமாக தொடங்கி இருக்கிறது.சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரே ஆட்டநாயகி விருதையும் பெற்றார்.

வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தை 13 ஆயிரத்து 432 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சுலபமல்ல.

140 ரன்கள் வரை எடுத்தால், அதை வைத்து எங்களது பந்து வீச்சாளர்கள் எதிரணியை கட்டுப்படுத்தி விடுவார்கள் என்று நினைத்தேன். அதன்படியே நடந்துள்ளது.

காயத்தால் அவதிப்பட்டு வந்த பூனம் யாதவ், சிறப்பாக மீண்டு வந்திருக்கிறார்.

முன்பு நாங்கள் 2-3 வீராங்கனைகளை சார்ந்து இருந்தோம்.

இப்போது ஒரு அணியாக அசத்துகிறோம். அணியை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் கூறுகையில், ‘பேட்டிங்கில் இந்தியா அருமையான தொடக்கம் கண்டது. அதன் பிறகு எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்களை கட்டுப்படுத்தினர்.பேட்டிங்கை பொறுத்தவரை நாங்கள் ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்தோம்.

துரதிர்ஷ்டவசமாக பேட்டிங்கில் திட்டமிடலை சரியாக செயல்படுத்த முடியாமல் போய் விட்டது. மிடில் வரிசையில் வலுவான பார்ட்னர்ஷிப் அமையாதது பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆட்டத்தில் என்ன தவறு செய்தோம் என்பதை கண்டறிந்து, அவற்றை அடுத்த ஆட்டத்தில் திருத்திக் கொள்வோம்’ என்றார்.

இந்திய அணி அடுத்த லீக்கில் நாளை மறுதினம் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டங்களில் தாய்லாந்து-வெஸ்ட் இண்டீஸ் (பகல் 12.30 மணி), நியூசிலாந்து-இலங்கை (மாலை 4.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker