TAMIL
நிர்வாக முறைகேடு எதிரொலி: தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டின் விளையாட்டு சம்மேளனம் மற்றும் ஒலிம்பிக் கமிட்டி நேற்று முன்தினம் அதிரடியாக இடைநீக்கம் செய்தது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகம் சீர்கெட்டு விட்டதாகவும், முறைகேடு நடந்துள்ளதாகவும், அது குறித்து விசாரிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் அறிக்கை வழங்கப்பட இருப்பதாகவும் விளையாட்டு சம்மேளனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு தலைமை செயல் அதிகாரி குகன்ட்ரி கோவென்டர் உள்பட நிர்வாக கமிட்டியினரை பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சட்டரீதியாக அணுக முடிவு செய்துள்ளது.
கிரிக்கெட் வாரிய நிர்வாக அமைப்பில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முக்கியமான விதிமுறையாகும்.
ஆனால் தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அந்த நாட்டு கிரிக்கெட் விவகாரங்களில் தலையிடுவதால் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு ஐ.சி.சி. தடை விதிக்க வாய்ப்புள்ளது.
அவ்வாறு தடை நடவடிக்கைக்கு உள்ளானால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது. இப்போதைக்கு அந்த நாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.-ல் விளையாடுவதில் சிக்கல் ஏதும் இல்லை.