TAMIL

தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் – இந்திய கேப்டன் கோலி வலியுறுத்தல்

புனேயில் நடந்த இலங்கைக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

இதில் லோகேஷ் ராகுல் (54 ரன்), ஷிகர் தவான் (52 ரன்) ஆகியோரது அரைசதத்தின் உதவியுடன் இந்திய அணி நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் 123 ரன்னில் ‘சரண்’ அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இந்த ஆண்டின் தொடக்கம் எங்களுக்கு நன்றாக அமைந்துள்ளது.

சரியான பாதையில் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறோம். ஒரு ஆட்டத்தில் இலக்கை விரட்டிப்பிடித்தோம்.

மற்றொரு ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றிருக்கிறோம்.

இரண்டு ஆட்டங்களிலும் மனநிறைவான செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த ஆட்டத்தில் மிடில் வரிசையில் விக்கெட் சரிவால் நெருக்கடி ஏற்பட்டது.

மனிஷ் பாண்டேவும் (31 ரன்), ஷர்துல் தாகூரும் (22 ரன்) இறுதி கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க வைத்தனர்.

ஒரு கட்டத்தில் 180 ரன்கள் தான் எடுப்போம் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் 201 ரன்கள் குவித்து விட்டோம். இதே போல் மும்பையில் வெஸ்ட் இ்ண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் முதலில் பேட் செய்த போது 200 ரன்கள் வரை கணித்து இருந்தோம்.

பிறகு 230 ரன்களுக்கு மேல் குவித்தோம். இத்தகைய நிலை தொடர வேண்டும்.

முதலில் பேட்டிங் செய்யும் போது, உறுதியற்ற தன்மையுடன் ஆடக்கூடிய அணியாக இருக்க விரும்பவில்லை.

2-வது பேட்டிங் செய்யும் போது எவ்வளவு நம்பிக்கையுடன் செயல்படுகிறமோ, அதே போல் முதலில் ஆடும் போதும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இந்திய அணியின் மூன்று தொடக்க ஆட்டக்காரர்களும் (ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஷிகர் தவான்) வலுவான வீரர்கள். 3 பேரும் அணிக்காக நன்றாக ஆடுவது நல்ல விஷயம்.

3 பேர் இருப்பதன் மூலம் தொடக்க வரிசைக்கு யாரை பயன்படுத்துவது என்ற வாய்ப்பு கிடைக்கிறது.அவர் தான் சிறந்தவர், இவர் தான் நன்றாக ஆடுகிறார் என்றெல்லாம் தொடக்க ஆட்டக்காரர்களை ஒப்பிட்டு பேசுவதை ரசிகர்களும், விமர்சனவாதிகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அணி பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். மற்றபடி அணியில் உள்ளவர்களுக்கு எதிராக பேசப்படும் கருத்துகளை நான் ஆதரிக்க மாட்டேன். இது நல்ல அறிகுறியும் அல்ல.

ஏனெனில் இது குழு சார்ந்த விளையாட்டு.

இத்தகைய வலுவான வீரர்களை கொண்டு தேசத்திற்காக திறமையை வெளிப்படுத்துவதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் அவ்வளவு தான்.

இவ்வாறு கோலி கூறினார்.

இரண்டு ஆட்டங்களிலும் படுதோல்வி அடைந்த நிலையில் அது குறித்து இலங்கை கேப்டன் மலிங்கா கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிரான தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து இருக்கிறோம்.

20 ஓவர் கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்தவன் என்ற முறையில் நான் நன்றாக செயல்பட வேண்டியது அவசியம். ஆனால் இந்த தொடரில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

அணிக்காக நான் எதுவும் செய்யவில்லை. அது தான் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

20 ஓவர் போட்டிக்கான இந்த அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் நான் தான்.

நான் விக்கெட் கைப்பற்றக் கூடிய பவுலர் என்பதால் எப்போதும் எனக்கு நெருக்கடி இருக்கும்.

ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் பவர்-பிளேயான முதல் 6 ஓவருக்குள் ஒன்றிரண்டு விக்கெட் எடுக்க வேண்டும். இந்த தொடரில் அதை செய்ய தவறி விட்டோம்.

20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியம். பேட்டிங் செய்யலாம், ஷாட்டுகள் அடிக்கலாம்.

ஆனால் வலுவான இன்னிங்சை உருவாக்குவது எப்படி என்பது குறித்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.

அதில் தான் எங்கள் அணியில் குறைபாடு இருக்கிறது’ என்றார்.

‘தொடக்க வரிசைக்கான போட்டியில் நானும் இருக்கிறேன்’- தவான்

கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடாத இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியின் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

கடைசி ஆட்டத்தில் அவரும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலும் அரைசதம் விளாசி அமர்க்களப்படுத்தினர்.

இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனும், பிரதான தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

அவர் வரும் போது, தவான், ராகுல் ஆகியோரில் ஒருவர் வழிவிட வேண்டி இருக்கும்.இதுகுறித்து 34 வயதான ஷிகர் தவான் கூறுகையில், ‘தொடக்க ஆட்டக்காரர் வரிசைக்கான போட்டி குறித்து கேட்கிறீர்கள். மூன்று பேருமே நன்றாக விளையாடுகிறோம்.

2019-ம் ஆண்டில் ரோகித் சர்மாவின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. கடந்த ஒன்றிரண்டு மாதங்களாக லோகேஷ் ராகுலும் அசத்துகிறார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடியதன் மூலம் இப்போது நானும் தொடக்க வரிசை ஆட்டக்காரர் போட்டியில் இணைந்து விட்டேன். இத்தகைய போட்டியை பார்க்க நன்றாகத் தான் உள்ளது.

இனி யாரை களம் இறக்குவது என்ற தலைவலி எனக்கு இல்லை.

அது அணி நிர்வாகத்தை சார்ந்தது. எனவே அது பற்றி சிந்திக்கவில்லை.

எனது பணி என்னவென்றால், அணிக்காக களம் இறங்கி நேர்த்தியான பங்களிப்பை அளிப்பது மட்டும் தான்.

இலங்கைக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் ரன்கள் எடுத்தது திருப்தி அளிக்கிறது.

ஷர்துல் தாகூரின் பந்து வீச்சு நன்றாக உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் அவர் பேட்டிங் செய்த விதம் வியப்பூட்டியது.

அவரது ஷாட்டுகள் பிரமாதமாக இருந்தன. குறுகிய வடிவிலான போட்டியில் அவர் ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

இது அணிக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும்’ என்றார்.

தரவரிசையில் கோலி முன்னேற்றம்

20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-8 இடங்களில் மாற்றமில்லை.

பாகிஸ்தானின் பாபர் அசாம் (879 புள்ளி) முதலிடத்திலும், ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 2-வது இடத்திலும் (810 புள்ளி) நீடிக்கிறார்கள்.

லோகேஷ் ராகுல் 6-வது இடத்தில் இருக்கிறார்.

இலங்கை தொடரில் அபாரமாக ஆடியதன் மூலம் கூடுதலாக 26 புள்ளிகளை பெற்று மொத்தம் 760 புள்ளிகளை எட்டியுள்ள ராகுல் 5-வது இடம் வகிக்கும் ஆஸ்திரேலியாவின் மேக்வெல்லை (766 புள்ளி) நெருங்கியுள்ளார்.

இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தையும் (683 புள்ளி), ஷிகர் தவான் ஒரு இடம் உயர்ந்து 15-வது இடத்தையும் (612 புள்ளி) பிடித்துள்ளனர்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-10 இடத்திற்குள் மாற்றமில்லை.

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முஜீப் ரகுமான் முதல் 2 இடங்களை வகிக்கிறார்கள்.

இந்திய தரப்பில் சிறந்த நிலையாக சுழற்பந்து வீ்ச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 14-வது இடத்தில் உள்ளார்.

காயத்தில் இருந்து மீண்டு அணிக்குள் நுழைந்துள்ள ஜஸ்பிரித் பும்ரா 8 இடங்கள் அதிகரித்து 39-வது இடத்தை பெற்றுள்ளார்.

இலங்கை தொடரில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட இந்திய புயல்வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 146 இடங்கள் எகிறி 98-வது இடத்துக்கு வந்துள்ளார்.

20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் இந்திய அணி மாற்றமின்றி 5-வது இடத்தில் தொடருகிறது.

முதல் 4 இடங்களில் முறையே பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இ்ங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் உள்ளன.Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker