TAMIL

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: சரிவில் இருந்து மீளுமா இங்கிலாந்து? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற
கணக்கில் முன்னிலை வகிக்கிறது.




இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ்
ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தொடர்ச்சியான 5 தோல்விக்கு பிறகு செஞ்சூரியன் போட்டியின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பிய தென்ஆப்பிரிக்க அணி உள்ளூரில்
தங்களது ஆதிக்கத்தை தொடரும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டியுள்ளது.

காயத்தால் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக பீட்டர் மலான் அறிமுக வீரராக இறங்குகிறார்.

டெம்பா பவுமா காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார்.

ஆனால் வான்டெர் துஸ்சென் சிறப்பாக ஆடுவதால் பவுமாவுக்கு இந்த டெஸ்டில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.

முதலாவது டெஸ்டில் பிலாண்டர் (35, 46 ரன் மற்றும் 4 விக்கெட்) ஆல்-ரவுண்டராக மிரட்டினார்.

தனது கடைசி தொடரில் ஆடும் பிலாண்டர் இந்த போட்டியிலும் அணிக்கு கணிசமான பங்களிப்பு அளிக்கும் வேட்கையுடன் காத்திருக்கிறார்.



இங்கிலாந்து அணியை பொறுத்தவரை சமீப காலமாக வெளிநாட்டு மண்ணில் அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.

சரிவில் இருந்து மீள்வதில் முனைப்பு காட்டும் இங்கிலாந்து அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும்.

வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது முழங்கை காயத்தால் அவதிப்படுகிறார்.

அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் இடம் பெற வாய்ப்புள்ளது.

இதே போல் ஜானி பேர்ஸ்டோ கழற்றி விடப்பட்டு ஆலிவர் போப் சேர்க்கப்படுகிறார்.

முதலாவது டெஸ்ட் போட்டி போன்று இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்காது.

பேட்டிங்குக்கும் ஒத்துழைக்கும்.

இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்க அணி கடைசியாக விளையாடிய 18 டெஸ்டுகளில் ஒன்றில் மட்டுமே தோற்று இருக்கிறது.



அதே சமயம் இங்கிலாந்து அணி இங்கு மொத்தத்தில் 20 டெஸ்டில் ஆடி 9-ல் வெற்றி கண்டுள்ளது.

ஆனால் 1957-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றதில்லை.

2016-ம் ஆண்டு இங்கு நடந்த டெஸ்டில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 258 ரன்கள் குவித்து சாதனை படைத்தது நினைவுகூரத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், பீட்டர் மலான், ஜூபைர் ஹம்சா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், குயின்டான் டி காக், பிரிட்டோரியஸ், வெரோன் பிலாண்டர், கேஷவ் மகராஜ், காஜிசோ ரபடா, அன்ரிச் நார்ஜே.

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ டென்லி, ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலிவர் போப், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், ஜோப்ரா ஆர்ச்சர் அல்லது டாம் பெஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker