TAMIL
சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட்: பரோடா அணி முன்னிலை

23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் (4 நாள் ஆட்டம்) தமிழ்நாடு-பரோடா அணிகள் மோதும் ஆட்டம் கோவையில் நடந்து வருகிறது.
இதில் முதலில் ஆடிய பரோடா அணி முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 82 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து இருந்தது.
சுவாமிநாதன் 49 ரன்னுடனும், சோனு யாதவ் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து ஆடிய சுவாமிநாதன் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து களம் கண்ட வீரர்கள் வந்த வேகத்திலேயே வெளியேறினார்கள்.
தமிழக அணி முதல் இன்னிங்சில் 88.5 ஓவர்களில் 232 ரன்னில் ஆட்டம் இழந்தது.
55 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பரோடா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
ஜோத்னில் சிங் 119 ரன்னுடனும், தேசாய் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
பரோடா அணி 262 ரன்கள் முன்னிலை பெற்று நல்ல நிலையில் உள்ளது.