CRICKETLATEST UPDATESNEWSTAMIL
கடந்த 4½ மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்- கங்குலி
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதை நடத்தி முடித்தது.
இந்த தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலியின் பணி அளப்பரியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவர் ஐ.பி.எல். தொடரை கடும் போராட்டத்துக்கு பிறகு நடத்தி முடித்தார்.
இந்தநிலையில் ஜூம் செயலி வழியாக கங்குலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 4½ மாதத்தில் நான் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன். இதில் ஒரு முறைகூட எனக்கு பாதிப்பு இருப்பதற்கான முடிவு வரவில்லை. என்னை சுற்றி வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததால் தான் நான் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். போட்டி தொடரை வெற்றிகரமாக பி.சி.சி.ஐ. குழு நடத்தியது பெருமையாக உள்ளது. 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நிச்சயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் நாங்கள் 400 பேர் உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தோம். எல்லோரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக 2½ மாத காலத்தில் 30 முதல் 40 ஆயிரம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியின் தனிமை படுத்துதல் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அனைத்து வீரர்களும் உடல்தகுதியுடன் இருக்கிறார்கள்.
உள்ளூர் கிரிக்கெட் சீசன் விரைவில் தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை குறித்து பலர் பேசி வருகிறார்கள். மும்பை, டெல்லியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கேள்விபட்டேன். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கங்குலி கூறினார்.