TAMIL
‘ஒரு நாள் தொடரிலும் லபுஸ்சேன் அசத்துவார்’ – பிஞ்ச்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 14-ந்தேதி மும்பையில் நடக்கிறது.
இதையொட்டி ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய துணை கண்டத்தில் விளையாடும் போது, உங்களது திறமை, திட்டமிடல் மீதே உங்களுக்கு சந்தேகம் வந்து விடும்.
ஏனெனில் அவர்கள் (இந்திய வீரர்கள்) வெகுவாக ஆதிக்கம் செலுத்தி அத்தகைய சந்தேகத்தை உங்களுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.
அது எங்களுக்கு தெரியும்.
எங்களது திறமை என்ன? இந்தியாவை வீழ்த்த என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோற்று பிறகு அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினோம்.
அது இந்திய சூழலில் சாதிப்பதற்கு எங்களுக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கிறது.
எங்களது வீரர் மார்னஸ் லபுஸ்சேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார்.
அவரது அத்தகைய ஆட்டம் ஒரு கிரிக்கெட்டிலும் தொடரும் என்று நம்புகிறேன். உள்ளூரில் நடந்த மார்ஷ் கோப்பை ஒரு நாள் போட்டியில் அவர் சிறப்பாக ஆடினார்.
3-வது வரிசையில் களம் இறங்கி சராசரியாக கிட்டத்தட்ட 40 ரன்கள் எடுத்திருந்தார். குயின்ஸ்லாந்து அணிக்காக வேகம் குறைந்த ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளித்தார்.
இது இந்திய தொடரிலும் அவருக்கு உதவிகரமாக இருக்கும்.
கிளைன் மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, நாதன் லயன் போன்ற வீரர்கள் ஒரு நாள் போட்டி அணியில் இடம் பெறவில்லை.
அதற்காக இனி அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று அர்த்தமில்லை.
அவர்களால் மீண்டும் அணிக்கு திரும்ப முடியும். இவ்வாறு பிஞ்ச் கூறினார்.