மெக்லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டம் மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 38.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அலிசா ஹீலி (65 ரன்), எலிஸ் பெர்ரி (56 ரன்), ஆஷ்லி கார்ட்னெர் (53 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ச்சியாக பெற்ற 22-வது வெற்றி இதுவாகும். ஒரு நாள் போட்டி வரலாற்றில் இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 21 ஆட்டங்களில் (2003-ம் ஆண்டு) வென்றதே உலக சாதனையாக இருந்தது. 18 ஆண்டுகால அச்சாதனையை அந்த நாட்டு பெண்கள் அணி முறியடித்திருக்கிறது.