TAMIL
ஐ.சி.சி.உயர்மட்ட நடுவர் குழுவில் நிதின் மேனன் சேர்ப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உயர்மட்ட நடுவர் குழுவில் (எலைட் பேனல்) சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்படும் நடுவர்கள் ஆண்டுதோறும் சேர்க்கப்படுவார்கள்.
போட்டிகளில் அவர்களது செயல்பாடு நன்றாக இருந்தால் அந்த பொறுப்பில் தொடர முடியும். திருப்திகரமாக இல்லையெனில் அந்த பொறுப்பில் இருந்து கழற்றி விடப்படுவார்கள்.
வரும் சீசனுக்கான (2020-21) ஐ.சி.சி. சிறந்த நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை ஐ.சி.சி. நடுவர் தேர்வு கமிட்டியினர் தேர்வு செய்து இருக்கிறார்கள்.
இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் நைஜெல் லாங் ஐ.சி.சி. நடுவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நிதின் மேனனுக்கு இடம் கிடைத்து இருக்கிறது.
ஐ.சி.சி.உயர்மட்ட நடுவர் குழுவில் இடம் பிடித்த 3-வது இந்தியர் நிதின் மேனன் ஆவார்.
ஏற்கனவே முன்னாள் கேப்டன் வெங்கட்ராகவன், சுந்தரம் ரவி ஆகியோர் இந்த நடுவர் குழுவில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.
கடைசியாக இந்திய நடுவர் சுந்தரம் ரவி கடந்த ஆண்டு அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
தற்போது இந்த நடுவர் குழுவில் அலீம் தார் (பாகிஸ்தான்), குமார் தர்மசேனா (இலங்கை) உள்பட 12 பேர் இடம் வகிக்கின்றனர். இதில் இளம் வயது நடுவர் நிதின் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியபிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நிதின் மேனன் 3 டெஸ்ட், 24 ஒருநாள் மற்றும் 16 இருபது ஓவர் போட்டியில் நடுவராக பணியாற்றி இருக்கிறார்.
2 ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி இருக்கும் நிதின் மேனன் தனது 22 வயதில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகினார்.
அடுத்த ஆண்டிலேயே அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடுவராக தேர்வானார்.
ஐ.சி.சி. எலைட் பேனல் நடுவர் குழுவில் இடம் பிடித்து இருப்பது குறித்து நிதின் மேனன் கருத்து தெரிவிக்கையில், ‘சிறந்த நடுவர் குழுவில் இடம் பெற்று இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.
எனது நீண்ட நாள் கனவு நனவாகி இருப்பது எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
புதிய சவாலை எதிர்நோக்குவதுடன், ஒவ்வொரு வாய்ப்பிலும் எனது சிறந்த பணியை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்.
இந்த நடுவர் பட்டியலில் வருங்காலத்தில் நிறைய இந்தியர்கள் இடம் பிடிப்பார்கள் என நம்புகிறேன்’ என்றார்.