TAMIL
ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி? – இன்று மோதுகிறது
10 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி,
எப்.சி. கோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
சென்னையின் எப்.சி. அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வி, 3 டிரா என்று 9 புள்ளியுடன் 8-வது இடம் வகிக்கிறது.
முதல் 4 ஆட்டங்களில் 3 தோல்வியுடன் பெரும் சரிவை சந்தித்த சென்னையின் எப்.சி. அணி புதிய பயிற்சியாளர் ஓவன் கோய்லியின்
வருகைக்கு பிறகு புத்தெழுச்சி பெற்றுள்ளது.
கடைசி 4 ஆட்டங்களில் 2 டிரா, 2 வெற்றியை ருசித்துள்ள சென்னை அணி, தனது வெற்றிப்பயணத்தை தொடருமா? என்று ரசிகர்கள்
ஆவல் கொண்டுள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வாகை சூடினால், புள்ளி பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேற முடியும்.
பயிற்சியாளர் கோய்லி கூறுகையில், ‘கோவா மிகச்சிறந்த அணி. புள்ளி பட்டியலில் முதன்மையான அணியாக திகழ்கிறது. அந்த
அணியை நாங்கள் மதிக்கிறோம்.
அதற்காக அவர்களை கண்டு பயந்துவிடவில்லை. முந்தைய கேரளா பிளாஸ்டர்சுக்கு எதிரான ஆட்டத்தில் (3-1 என்ற கோல்)
வெளிப்படுத்திய திறமையை மீண்டும் காட்டினால் வெற்றி சாத்தியம்’ என்றார்.
சென்னை அணியில் வல்ஸ்கிஸ் 5 கோல்கள் அடித்து நம்பிக்கைக்குரிய வீரராக உள்ளார். அவரைத் தான் அணி அதிகமாக சார்ந்து உள்ளது.
எப்.சி. கோவா அணி 5 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி என்று 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
தாக்குதல் ஆட்டத்துக்கு பெயர் போன கோவா அணியில் பெர்ரன் கோரோமினாஸ், பிரான்டன் பெர்னாண்டஸ், ஹூகோ பவுமோஸ்
கடும் சவாலாக இருப்பார்கள். நடப்பு தொடரில் 8 வீரர்கள் அந்த அணியில் கோல் அடித்திருப்பது சிறப்பம்சமாகும்.
மேலும், சென்னை நேரு மைதானத்தில் கோவா அணி மொத்தத்தில் 6 ஆட்டங்களில் ஆடி அதில் 4-ல் வெற்றி பெற்றிருப்பது அந்த
அணிக்கு சாதகமான விஷயமாக கருதப்படுகிறது.
கோவா பயிற்சியாளர் செர்ஜியோ லோப்ரா கூறுகையில், ‘சென்னை அணி வீரர்கள் தீவிரத்துடன் விளையாடுகிறார்கள்.
தடுப்பாட்டக்காரர்களும், அதிரடி வீரர்களும் சரியான கலவையில் உள்ளனர்.
அதனால் நிச்சயம் இது எளிதான ஆட்டமாக இருக்காது’ என்றார்.
இந்த சீசனில் முதல் போட்டியில் கோவாவிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த சென்னை அணி அதற்கு பதிலடி கொடுக்க
வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இதற்கிடையே கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 45-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி
1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.-யை வீழ்த்தியது.
வெற்றிக்குரிய கோலை டேவிட் வில்லியம்ஸ் 47-வது நிமிடத்தில் அடித்தார்.
10-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூருக்கு இது 2-வது தோல்வியாகும்.
அதே சமயம் 10-வது ஆடடத்தில் ஆடிய கொல்கத்தா அணி 5 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி என்று 18 புள்ளிகளுடன் பட்டியலில்
முதலிடத்தை எட்டியுள்ளது.
கோவா அணியும் 18 புள்ளிகள் பெற்ற போதிலும் கோல் வித்தியாசத்தில் கொல்கத்தா முன்னணியில் இருக்கிறது.