CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இந்திய அணியை விராட்கோலி வழிநடத்தும் விதம் புரியவில்லை- கவுதம் கம்பீர் சாடல்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து தொடரை இழந்தது. இந்திய பந்து வீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் வெளுத்து வாங்கி முறையே 374, 389 ரன்கள் குவித்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட்கோலியின் முடிவு மோசமானதாக இருந்ததாகவும், அவரது யுக்தியை புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபோல் உலக கிரிக்கெட்டில் வேறு எந்தவொரு கேப்டனும் முடிவு எடுக்கமாட்டார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.

இது குறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விராட்கோலியின் கேப்டன்ஷிப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியின் வலுவான பேட்டிங்கை கட்டுப்படுத்த ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானதாகும். ஆனால் நீங்கள் உங்களது முதன்மையான பந்து வீச்சாளர் பும்ராவுக்கு தொடக்க கட்டத்தில் 2 ஓவர் மட்டுமே பந்து வீச வாய்ப்பு அளிக்கிறீர்கள். இந்த முடிவு மிகப்பெரிய தவறாகும். ஆரம்ப கட்டத்தில் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் தலா 5 ஓவர்கள் வீசி சில விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.

பும்ரா போன்ற முன்னணி பவுலருக்கு உலக கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் புதிய பந்தில் 2 ஓவர் மட்டுமே வீச வாய்ப்பு அளிப்பார் என்று நான் நினைக்கவில்லை. பும்ரா போன்ற வீரருக்கு முதலில் 2 ஓவர் மட்டுமே பந்து வீச வாய்ப்பு அளித்து விட்டு, 10-வது ஓவருக்கு பிறகு மீண்டும் வாய்ப்பு அளித்தால் பந்து பழசாகி விடும். அப்போது அவரால் எப்படி விக்கெட் வீழ்த்த முடியும் என்று எதிர்பார்க்க முடியும்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அந்த அணியின் சிறந்த பவுலரான ஹேசில்வுட்டுக்கு முதல் இரண்டு ஆட்டங்களில் தொடக்க கட்டத்தில் எப்படி 5 மற்றும் 6 ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு அளித்தார். அதேபோல் அந்த அணியின் 6-வது பவுலர் வாய்ப்பையும் அவர் நேர்த்தியாக கையாண்டார்.

விராட்கோலிக்கும், ஸ்டீவன் சுமித்துக்கும் இடையே அதிக வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எண்ணிக்கையில் பார்த்தால் விராட்கோலி எப்பொழுதும் ஸ்டீவன் சுமித்தை விட சிறப்பானவராகவே இருப்பார். ஆனால் கடந்த 5 அல்லது 7 ஒருநாள் போட்டிகளில் சாதனைகளை பார்த்தால், அதில் ஸ்டீவன் சுமித் 3 சதங்களை அடித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அதிக வித்தியாசம் இருக்காது. அவர் 62 பந்துகளில் அடுத்தடுத்து 2 சதம் அடித்துள்ளார். எண்ணிக்கையை வைத்து (ரன் குவிப்பு மற்றும் சதத்தில் விராட்கோலி முன்னிலையில் உள்ளார்) விராட்கோலியை ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர் என்று நீங்கள் அழைக்கலாம். ஆட்ட திறனை பொறுத்தமட்டில் விராட்கோலிக்கும், ஸ்டீவன் சுமித்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது.

இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker