TAMIL

இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: தர்மசாலாவில் இன்று நடக்கிறது

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.சமீபத்தில் நியூசிலாந்து மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரிலும் (0-3), டெஸ்ட் தொடரிலும் (0-2) இந்திய அணி படுதோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது.

மறுபடியும் வெற்றிப்பாதையில் பயணிப்பதற்கு உள்ளூரில் நடக்கும் இந்த தொடரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்.

முதுகுவலி காயத்தால் ஓய்வில் இருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியுள்ளார்.

6 மாதத்திற்கு பிறகு சர்வதேச போட்டியில் கால்பதிக்கும் அவரது பேட்டிங் மற்றும் பந்து வீச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயத்தில் சிக்கியுள்ள ரோகித் சர்மா இந்த தொடரில் ஆடவில்லை. அதே நேரத்தில் தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷிகர் தவானின் வருகை அணிக்கு வலுசேர்க்கும்.

தவானுடன், இளம் வீரர் பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது. நியூசிலாந்து தொடரில் சொதப்பிய இந்திய கேப்டன் விராட் கோலி பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.கோலி இன்னும் 133 ரன்கள் எடுத்தால் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை சச்சின் தெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறித்து விடுவார்.

குடலிறக்க பிரச்சினைக்கு ஆபரேஷன் செய்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாரின் மறுபிரவேசமும் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

தர்மசாலாவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால், இந்திய வீரர்கள் அதற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்த தெம்போடு இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது.

கேப்டன் டி காக், பாப் டு பிளிஸ்சிஸ், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர் ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் சார்ந்து இருக்கிறது.பந்து வீச்சில் நிகிடி, அன்ரிச் நார்ஜே மிரட்டுவார்கள்.

டி காக் கூறுகையில், ‘பாப் டு பிளிஸ்சிஸ் அணிக்கு திரும்பி இருப்பது உற்சாகம் அளிக்கிறது. ஏற்கனவே அணியை வழிநடத்தி இருக்கும் அவர் அந்த வகையில் முக்கிய பங்கு வகிப்பார்.

இளம் வீரர்களுக்கு உதவிகரமாக இருப்பார். அவரது அனுபவம் இந்த தொடரில் எங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

போதிய அனுபவம் இல்லாத இளம் வீரர்களுக்கு நான், பிளிஸ்சிஸ், மில்லர் போன்ற சீனியர் வீரர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டியது முக்கியம். இந்தியா நம்ப முடியாத ஒரு அணி.

சரியான கலவையில் வீரர்களை கொண்டிருக்கிறது.

ஆனால் நாங்களும் இங்கு நிறைய நம்பிக்கையுடன் வந்துள்ளோம்’ என்றார்.

தர்மசாலாவில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இன்று காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

எனவே இந்த ஆட்டம் மழையால் சீர்குலைய அதிக வாய்ப்புள்ளது.தர்மசாலாவில் இதற்கு முன்பு 4 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன.

இதில் இந்திய அணி 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா 6 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும்.

2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா 112 ரன்களில் சுருண்டது குறைந்த ஸ்கோராகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், பிரித்வி ஷா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக் (கேப்டன்), ஜெனிமான் மலான், ஸ்முட்ஸ் அல்லது வான்டெர் துஸ்சென், பிளிஸ்சிஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கேஷவ் மகராஜ், பீரன் ஹென்ரிக்ஸ் அல்லது ஜார்ஜ் லின்டே, அன்ரிச் நார்ஜே, நிகிடி.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

‘செல்பி வேண்டாம்’இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலாக பரவி வருவதால் வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவினர், உலக

சுகாதார அமைப்பு மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

‘கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ள பிரத்யேக ஓட்டலை தவிர வெளியில் சென்று சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெளியில் உணவு எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும் என்பது தெரியாது.

யாருடனும் கைகுலுக்கக் கூடாது.

மற்றவர்களின் செல்போனை பயன்படுத்தி செல்பி எடுக்கக்கூடாது.

அணியைச் சாராத நபர்களுடன் நெருக்கமாக பேச வேண்டாம்’ என்று வீரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ஸ்டேடியத்தில் பொதுமக்களுக்குரிய கைகழுவும் இடங்களில் கைகழுவும் திரவம் தட்டுப்பாடு இல்லாமல் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை…

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 84 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.இதில் 35-ல் இந்தியாவும், 46-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டத்தில் முடிவில்லை.

தென்ஆப்பிரிக்க அணி, இந்திய மண்ணில் இரு நாட்டு ஒரு நாள் தொடரில் ஆடுவது இது 6-வது முறையாகும்.

இதில் 2015-ம் ஆண்டில் மட்டும் தென்ஆப்பிரிக்கா தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker