TAMIL

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நாளை தொடக்கம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் பெர்த்தில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.



இந்த நிலையில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான மெல்போர்னில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்த டெஸ்டுக்கு இன்னொரு சிறப்பு உண்டு.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு மேலைநாடுகளில் ‘பாக்சிங் டே’ என்று பெயர். ‘பாக்சிங் டே’ என்றால் ஒருவருக்கொருவர் மல்லுகட்டும் நாள் என்று அர்த்தம் கிடையாது.

அந்த பெயர் எப்படி வந்தது என்பதை வரலாற்றை புரட்டிப்பார்த்தால் சில சுவாரஸ்யமான கதைகள் உண்டு.

* இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன்பு பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கும் பழக்கம் உண்டு.

ஆலயத்திற்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த நன்கொடையை போடுவார்கள்.

மறுநாள் அதாவது டிசம்பர் 26-ந்தேதி அன்று பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை, எளியோருக்கு தானமாக வழங்குவார்கள்.



பாக்சை திறக்கும் நாளை ‘பாக்சிங் டே’ என்று அழைக்கிறார்கள்.

* முன்பு தங்களிடம் ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தங்களது
குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது அவர்களின் முதலாளிகள் சிறப்பு கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக கொடுத்து அனுப்புவார்கள்.

இதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

* முந்தைய காலக்கட்டத்தில் காற்றால் இயக்கப்படும் கப்பல்களில் மேற்கொள்ளப்படும் பயணம் ஆபத்து இன்றி நல்லபடியாக அமைய வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பணம் அடங்கிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும்.

பயணம் வெற்றி பெற்றதும் அந்த பெட்டி பாதிரியாரிடம் ஒப்படைக்கப்படும்.

கிறிஸ்துமஸ் அன்று அது திறக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும். இதுவும் ‘பாக்சிங் டே’ பெயர் உதயமானதற்கு ஒரு காரணமாக சொல்கிறார்கள்.



1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் குறிப்பிட்ட ஆண்டுகள் அன்றைய தினத்தில் போட்டியை நடத்த இயலாமல் போய் விட்டது.

இருப்பினும் 1980-ம் ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டின் கடைசியிலும் ‘பாக்சிங் டே’ அன்று டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்று இருக்கிறது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி அன்று ஏதாவது ஒரு அணி, புகழ்பெற்ற மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்டில் விளையாடிக் கொண்டிருக்கும்.

கடந்த முறை இங்கு இந்திய அணி விளையாடி வெற்றி கண்டது.

இந்த தடவை வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கோதாவில் குதிக்கிறது.

நியூசிலாந்து அணி ‘பாக்சிங் டே’ டெஸ்டில் விளையாட இருப்பது 1987-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த அணியாக களம் இறங்குகிறது.



கடந்த டெஸ்டில் தசைப்பிடிப்பால் விலகிய ஹேசில்வுட்டுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் இடம் பெறுவார் என்று பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இதே போல் வலைபயிற்சியின் போது பந்து தாக்கி கையில் காயமடைந்த டேவிட் வார்னர் உடல்தகுதியை எட்டி விட்டதாகவும் லாங்கர் கூறினார்.

தொடர்ச்சியாக 3 டெஸ்டுகளில் சதம் அடித்த மார்னஸ் லபுஸ்சேன், ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் உள்ளிட்டோரின் பேட்டிங் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாளில் 76 ஆயிரம் ரசிகர்கள் வரை திரளுவார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அவர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் உற்சாகமாக அடியெடுத்து வைக்க ஆஸ்திரேலிய வீரர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீள கடுமையாக போராடும்.

விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் இந்த டெஸ்டில் விளையாட வாய்ப்பு உள்ளது.

அவர் உடல்தகுதியை எட்டி விட்டால் பந்து வீச்சில் நியூசிலாந்து வலுவடையும். மற்றபடி பேட்டிங்கில் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லாதம் ஆகியோரைத் தான் நியூசிலாந்து அதிகமாக சார்ந்து இருக்கிறது.



சமீபத்தில் இங்கு நடந்த உள்ளூர் முதல்தர போட்டியில் ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆனது. ஆடுகளத்தன்மை அபாயகரமானதாக இருப்பதாக கூறி அந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

இந்த டெஸ்ட் போட்டிக்கு அதற்கு பக்கத்தில் உள்ள ஆடுகளம் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும் சர்ச்சை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆடுகள பராமரிப்பாளர் மேட் பேஜ் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆடுகளத்தில் புற்கள் இருப்பதால் வேகத்துடன் பவுன்ஸ் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் ‘ஷாட்பிட்ச்’ யுக்தியை பவுலர்கள் அதிகமாக கையாளுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker