TAMIL

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து? : கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் பெர்த்தில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் 296 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் 247 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.



இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த டெஸ்டிலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

சிட்னி மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கும், சுழற்பந்து வீச்சுக்கும் உகந்தது.

அதனால் ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயனுடன், புதுமுக சுழற்பந்து வீச்சாளர் 26 வயதான மிட்செல் ஸ்வெப்சன் அறிமுக வீரராக இடம் பெற வாய்ப்புள்ளது.



ஸ்வெப்சன் வாய்ப்பு பெற்றால், மேத்யூ வேட் நீக்கப்படலாம். மற்றபடி ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக களம் இறங்க தயாராக உள்ளது.

ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், லபுஸ்சேன் ஆகியோர் பேட்டிங்கிலும், கம்மின்ஸ், நாதன் லயன், பேட்டின்சன் பந்து வீச்சிலும் மிரட்டக்கூடியவர்கள்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் இரண்டு டெஸ்டிலும் சந்தித்த மோசமான தோல்வியால் துவண்டு போய் உள்ளது.

கேப்டன் வில்லியம்சன் 2-வது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தார். அவரது தடுமாற்றம் நியூசிலாந்துக்கு பாதகமாக அமைந்தது.

கடந்த டெஸ்டில் டாம் பிளன்டெல் சதம் அடித்தது ஆறுதல் அளித்தது.



வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லாதம், நிகோல்ஸ் உள்ளிட்டோர் நிலைத்து நின்று ஆடினால் தான், ஆஸ்திரேலியாவின் தாக்குதலை சமாளிக்க முடியும்.

இந்த டெஸ்டில் 2-வது சுழற்பந்து வீச்சாளராக சோமர்வில்லேவை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.

மொத்தத்தில் புத்தாண்டின் முதல் போட்டியான இதில் சரிவில் இருந்து எழுச்சி பெற்று நியூசிலாந்து பதிலடி கொடுக்குமா? அல்லது மீண்டும் பணிந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சிட்னி மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ராசியானது. கடைசியாக இங்கு விளையாடிய 25 டெஸ்டுகளில் 2-ல் மட்டுமே ஆஸ்திரேலியா தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.



நியூசிலாந்து அணி இங்கு ஆடியுள்ள 2 டெஸ்டுகளில் ஒன்றில் தோல்வியும், மற்றொன்றில் டிராவும் சந்தித்து உள்ளது.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker