TAMIL

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பப்புவா நியூ கினியா, அயர்லாந்து அணிகள் தகுதி

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் முதல் 10 இடங்கள் வகிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன.



எஞ்சிய 6 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். தகுதி சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 14 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, நமிபியா, சிங்கப்பூர், கென்யா, பெர்முடா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து, ஓமன், ஹாங்காங், கனடா, ஜெர்சி, நைஜீரியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறுவதுடன், உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இரு பிரிவிலும் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றில் மோதி அதில் வெற்றி காணும் 2 அணிகள் அரைஇறுதிக்குள் நுழைவதுடன் உலக போட்டிக்கும் தகுதி காணும். ‘பிளே-ஆப்’ சுற்றில் தோற்கும் இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் ஏ, பி பிரிவில் 4 இடத்தை பெறும் அணிகளுடன் மோத வேண்டும். இவ்விரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிகள் 5-வது, 6-வது அணியாக உலக கோப்பை போட்டிக்கு தேர்வாகும்.

லீக் சுற்று போட்டிகள் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தன. ‘ஏ’ பிரிவில் பப்புவா நியூ கினியா (5 வெற்றி, ஒரு தோல்வி) 10 புள்ளியும், நெதர்லாந்து (5 வெற்றி, ஒரு தோல்வி) 10 புள்ளியும், நமிபியா (4 வெற்றி, 2 தோல்வி) 8 புள்ளியும் பெற்றன. ரன் ரேட் அடிப்படையில் பப்புவா நியூ கினியா அணி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. ‘பி’ பிரிவில் அயர்லாந்து (4 வெற்றி, 2 தோல்வி) 8 புள்ளியும், ஓமன் (4 வெற்றி, 2 தோல்வியும்) 8 புள்ளியும், ஐக்கிய அரபு அமீரகம் (4 வெற்றி, 2 தோல்வி) 8 புள்ளியும் பெற்று சமநிலை வகித்தன. ரன் ரேட் அடிப்படையில் அயர்லாந்து அணி முதலிடம் பெற்றது. இரு பிரிவிலும் முதலிடம் பிடித்த பப்புவா நியூ கினியா, அயர்லாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியதுடன் நேரடியாக உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றன.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம்-நெதர்லாந்து, நமிபியா-ஓமன் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைப்பதுடன் உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும். தோல்வி அடையும் அணிகள் 4-வது இடத்தை பெற்றுள்ள ஸ்காட்லாந்து (ஏ பிரிவு), ஹாங்காங் (பி பிரிவு) அணியில் ஒன்றுடன் நாளை மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு முன்னேறும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker