TAMIL

38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் – தமிழக அணி, கர்நாடகாவை சந்திக்கிறது

இந்தியாவில், முதன்மையான முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி போட்டி 1934-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 86-வது ரஞ்சி போட்டி இன்று தொடங்கி மார்ச் மாதம் வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது. போட்டியில் பங்கேற்கும் 38 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. சண்டிகார் அணி முதல்முறையாக ரஞ்சியில் கால்பதிக்கிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.



இந்த சீசனில் குறிப்பிட்ட வீரர்கள் சாதனையை நோக்கி பயணிக்கிறார்கள். ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக சதங்கள், அதிக ரன்கள் குவித்தவரான தற்போது நடப்பு சாம்பியன் விதர்பா அணிக்காக விளையாடும் 41 வயதான வாசிம் ஜாபர் நடப்பு தொடரில் 853 ரன்கள் எடுத்தால், முதல்தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார். மேலும் 3 கேட்ச் செய்தால் ரஞ்சியில் 200 கேட்ச் செய்த முதல் பீல்டர் என்ற சிறப்பை பெறுவார். முதலாவது ஆட்டத்தில் களம் இறங்கும் போது அவரது 150-வது ஆட்டமாக அமையும்.

சவுராஷ்டிரா வீரரான புஜாரா ஒரு செஞ்சுரி அடித்தால், முதல்தர கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த 9-வது இந்தியராக சாதனை பட்டியலில் இணைவார். கர்நாடக முன்னாள் கேப்டனும் தற்போது புதுச்சேரி அணிக்காக விளையாடுபவருமான வேகப்பந்து வீச்சாளர் வினய்குமாருக்கு 400 விக்கெட் இலக்கை எட்டுவதற்கு இன்னும் 3 விக்கெட் தேவையாகும். தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் (3 ஆட்டம் தேவை), அபினவ் முகுந்த் (4 ஆட்டம் தேவை) ஆகியோர் 100-வது ஆட்டத்தை நெருங்குகிறார்கள்.

முதல் நாளில் 18 ஆட்டங்கள் நடக்கிறது. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது முதலாவது லீக்கில் கருண் நாயர் தலைமையிலான பலம் வாய்ந்த கர்நாடகாவை (4 நாள் ஆட்டம்) சந்திக்கிறது. இந்த ஆட்டம் திண்டுக்கல் நத்தத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

41 முறை சாம்பியனான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி பரோடாவை (பி பிரிவு) வதோதராவில் எதிர்கொள்கிறது. புதுச்சேரி அணி பீகாருடனும் (பாட்னா), நடப்பு சாம்பியன் விதர்பா அணி, ஆந்திராவுடனும் (விஜயவாடா) மோதுகிறது. டெஸ்ட் ஆட்டக்காரர்கள் ரஹானே, பிரித்வி ஷா (மும்பை), அஸ்வின் (தமிழ்நாடு), மயங்க் அகர்வால் (கர்நாடகா) உள்ளிட்டோர் ரஞ்சியில் விளையாட உள்ளனர். காயத்தால் ஓய்வில் இருக்கும் பும்ரா, ஹர்திக் பாண்டயா தங்களது உடல்தகுதியை நிரூபிக்க சில ஆட்டங்களில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஹசாரே, சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார். ஆனால் ரஞ்சி போட்டிக்கு தனது பெயரை கேப்டனாக பரிசீலிக்க வேண்டாம் என்று தேர்வு குழுவினரை கேட்டுக் கொண்டார். இது குறித்து 34 வயதான தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘தமிழக அணியை முன்னெடுத்து செல்ல இளம் வீரர் ஒருவரை கேப்டனாக நியமிக்க இதுவே சரியான நேரமாகும். கேப்டன் பொறுப்பை இந்த ஆண்டுக்கு மட்டும் வழங்கக்கூடாது. 2-3 ஆண்டுகள் அவரே கேப்டனாக இருக்க வேண்டும்.

நம்மிடம் திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள், எந்த மாதிரி விளையாடினால் தமிழக அணிக்காக ரஞ்சி கோப்பையை வெல்ல முடியும் என்பது குறித்து சிந்தித்து அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். போதுமான வாய்ப்பு வழங்கினால், இதை அவர்களால் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

என்னை பொறுத்தரை தமிழக அணிக்காக உற்சாகமாக அனுபவித்து விளையாடுகிறேன். நான் எப்போதும் மாநில அணிக்காக நன்றாக விளையாட வேண்டும், அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இதில் சிறப்பாக ஆடுவதன் மூலம் இந்திய அணிக்குள் மீண்டும் இடம் கிடைத்தால் அதை விட மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாது’ என்றார்.

28 வயதான ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக அணி வருமாறு:-

விஜய் சங்கர் (கேப்டன்), பாபா அபராஜித் (துணை கேப்டன்), எம்.விஜய், அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக், ஜெகதீசன், ஆர்.அஸ்வின், சாய் கிஷோர், நடராஜன், விக்னேஷ், அபிஷேக் தன்வார், எம்.அஸ்வின், சித்தார்த், ஷாருக்கான், கே.முகுந்த்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker