TAMIL

2019-ம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தியது யார்? : ரோகித் சர்மா, லபுஸ்சேன், கம்மின்ஸ் ஆதிக்கம்

2019-ம் ஆண்டில் மொத்தம் 39 டெஸ்டுகள் நடந்துள்ளன. அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் தலா 12 டெஸ்டுகளில் விளையாடி உள்ளன.

இதில் ஆஸ்திரேலியா 8-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும், 2-ல் டிராவும் சந்தித்தது. இங்கிலாந்து 4-ல் மட்டுமே வெற்றி (எஞ்சிய 6-ல் தோல்வி, 2-ல் டிரா) பெற்றது. 2019-ம் ஆண்டில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா மட்டும் தான். 8 டெஸ்டுகளில் பங்கேற்று 7-ல் வெற்றி பெற்றது.



இதில் 4 இன்னிங்ஸ் வெற்றிகளும் அடங்கும். மற்றொரு போட்டி டிரா ஆனது.

வங்காளதேசம் (5 டெஸ்ட்), அயர்லாந்து (2 டெஸ்ட் ) அனைத்திலும் தோல்வியை தழுவிய அணிகள் ஆகும்.

ஹாமில்டனில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 715 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும்.

100 ரன்னுக்குள் அடங்கிய நிகழ்வு 4 முறை நடந்தது.

இதில் அயர்லாந்து அணி லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 38 ரன்னில் சுருண்டது மோசமான ஸ்கோராகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தை பிடித்தார்.

அவர் 11 டெஸ்டில் 3 சதம், 7 அரைசதம் உள்பட 1,104 ரன்கள் (சராசரி 64.94) சேர்த்துள்ளார்.

இந்திய வீரர்களில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 8 டெஸ்டில் ஆடி 3 சதம் உள்பட 754 ரன்கள் எடுத்துள்ளார்.



மொத்தம் 72 சதங்கள் பதிவாகியுள்ளன.

அடிலெய்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முச்சதம் (335* ரன்) நொறுக்கியது தனிநபர் அதிகபட்சமாகும்.

டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் ‘நம்பர் ஒன்’ இடத்தை ஆக்கிரமித்துள்ள ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 12 டெஸ்டுகளில் 59 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

முகமது ஷமி, ஹேசில்வுட், காஜிசோ ரபடா, டிம் சவுதி ஆகியோர் ஒரே மாதிரி 8 டெஸ்டுகளில் தலா 33 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது ஆச்சரியமான ஒற்றுமையாகும்.

வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ், இங்கிலாந்துக்கு எதிராக 60 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை அள்ளியது இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சாகும்.

ஒரு நாள் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் மொத்தம் 150 ஆட்டங்கள் நடந்துள்ளன. அதிகபட்சமாக இந்தியா 28 ஆட்டங்களில் விளையாடி 19-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

இந்த ஆண்டில் ஒரே ஒரு ஆட்டம் சமனில் (டை) முடிந்துள்ளது. அது இங்கிலாந்து-நியூசிலாந்து இடையே நடந்த உலக கோப்பை இறுதி ஆட்டமாகும்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் (தலா 15-ல் தோல்வி) அதிக சறுக்கலை சந்தித்த அணிகளாகும்.

செயின்ட் ஜார்ஜில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்தது ‘மெகா’ ஸ்கோராகும்.



இந்த ஆண்டில் 400 ரன்களை கடந்த ஒரே அணி இங்கிலாந்து தான். நமிபியாவுக்கு எதிராக ஓமன் அணி 81 ரன்னில் அடங்கியது குறைந்தபட்சமாகும்.

இந்திய வீரர் ரோகித் சர்மா 36 சிக்சர், 146 பவுண்டரி என்று 1,490 ரன்களுடன் அதிக ரன்கள் குவிப்பில் முதலிடம் வகிக்கிறார். 99 சதங்கள் அடிக்கப்பட்டு உள்ளன.

ரோகித் சர்மா அதிகபட்சமாக 7 சதங்களும், இந்திய கேப்டன் விராட் கோலி 5 சதங்களும் அடித்திருக்கிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான் கேம்ப்பெல் அயர்லாந்துக்கு எதிராக 179 ரன்கள் எடுத்தது தனிநபர் உயர்ந்த ஸ்கோராகும்.

விக்கெட் வீழ்த்தியதில் முதல்வனாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி திகழ்கிறார்.

அவர் 21 ஆட்டங்களில் 42 விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்தது தனிநபர் சிறந்த பந்து வீச்சாக அமைந்துள்ளது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தான் ஆச்சரியங்களும், அதிசயங்களும் அதிகமாக நிகழ்ந்துள்ளன.

இந்த ஆண்டில் நடந்துள்ள 20 ஓவர் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? 307.



இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அதிகமான 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன.

அதற்கு காரணம், கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த பல குட்டி அணிகள் மோதிய ஆட்டங்களுக்கும் சர்வதேச அந்தஸ்தை ஐ.சி.சி. வழங்கியிருந்தது.

மொத்தம் 71 அணிகள் இந்த ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் கால்பதித்தன. இதில் அர்ஜென்டினா, பக்ரைன், பெல்ஜியம், பிரேசில், செக்குடியரசு, டென்மார்க், கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், சிங்கப்பூர், துருக்கி, உகாண்டா போன்ற அணிகளும் அடங்கும்.

கடந்த ஆகஸ்டு மாதம் ருமேனியா தலைநகர் புச்சாரெஸ்ட் வடகிழக்கே மோரா விளசியா என்ற கிராமத்தில் நடந்த துருக்கிக்கு எதிரான ஆட்டத்தில் செக்குடியரசு 4 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்து, முந்தைய உலக சாதனையை (ஏற்கனவே ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது) சமன் செய்தது.

கட்டாந்தரை மைதானத்தில் அரங்கேறிய இந்த ஆட்டத்தை நேரில் பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு டஜன் கூட கிடையாது. ஏன் செக்குடியரசு வீரர்களுக்கு கூட களத்தில் நின்றது வரை இது உலக சாதனை என்று தெரியாது.

இதே ஆட்டத்தில் செக்குடியரசு வீரர் 37 வயதான சுதேஷ் விக்ரமசேகரா 35 பந்துகளில் சதம் விளாசி, அதிவேக சதம் கண்டவர்களான இந்தியாவின் ரோகித் சர்மா, தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் (இவர்களும் 35 பந்தில் சதம் அடித்திருந்தனர்) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.

துருக்கியை வெறும் 21 ரன்னில் சுருட்டி 257 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்ததும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.



துருக்கி அணி 21 ரன்னில் சுருண்டது தான், 20 ஓவர் கிரிக்கெட்டில் மொத்தத்தில் ஒரு அணியின் குறைந்த ஸ்கோராகும்.

19 வீரர்கள் சதம் அடித்தனர். ஆனால் இந்த பட்டியலில் இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை. ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய், அயர்லாந்துக்கு எதிராக 162 ரன்கள் விரட்டியது தனிநபர் அதிகபட்சமாகும்.

அதிக ரன்கள் எடுத்ததில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங்கும் (748 ரன், 20 ஆட்டம்), அதிக விக்கெட் வீழ்த்தியதில் நேபாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சன்னேவும் (16 ஆட்டத்தில் 28 விக்கெட்) முதலிடம் பிடித்தனர்.

சிக்சர் மன்னர்களாக டெஸ்டில் ரோகித் சர்மாவும் (20 சிக்சர்), ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்லும் (56 சிக்சர்), 20 ஓவர் போட்டியில் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையனும் (36 சிக்சர்) வலம் வருகிறார்கள்.

இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (5) டெஸ்டிலும், ஆப்கானிஸ்தானின் முஜீப் ரகுமான், ரஷித்கான் (தலா 4) ஆகியோர் ஒரு நாள் போட்டியிலும் அதிக டக்-அவுட் ஆனவர்கள் ஆவார்கள்.

‘சாதனையின் சிகரம்’ என்று வர்ணிக்கப்படும் இந்திய கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வடிவிலான போட்டியில் முதலிடத்தை பெறாமல் இருக்கலாம்.

ஆனால் மூன்று வடிவிலான போட்டியையும் சேர்த்து 2019-ல் அதிக ரன்கள் குவித்தவர் இவர் தான்.

டெஸ்டில் 612 ரன், ஒரு நாள் போட்டியில் 1,377 ரன், 20 ஓவர் போட்டியில் 466 ரன்கள் என மொத்தம் 7 சதம் உள்பட 2,455 ரன்கள் குவித்து ‘நம்பர் ஒன்’ நானே என தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியிருக்கிறார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker