TAMIL

2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது ஏன்? – சங்கக்கரா விளக்கம்

2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 28 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது.

இதில் இலங்கை நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை இந்திய அணி டோனி (91 ரன்), கவுதம் கம்பீர் (97 ரன்) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது.

முன்னதாக இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. உலக கோப்பை வரலாற்றில் இரண்டு தடவை ‘டாஸ்’ என்பது அரிதான ஒரு நிகழ்வாகும்.

குழப்பத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து அப்போது இலங்கை அணியின் கேப்டனாக இருந்த குமார் சங்கக்கரா விளக்கியுள்ளார். இந்திய வீரர் ஆர்.அஸ்வினுடன் நடந்த ‘இன்ஸ்டாகிராம்’ உரையாடலில் சங்கக்கரா கூறியதாவது:-

இறுதி ஆட்டம் அரங்கேறிய மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் திரண்டு இருந்தது. இவ்வளவு கூட்டத்தை எங்கள் நாட்டில் ஒரு போதும் பார்த்ததில்லை.

ஒரு முறை கொல்கத்தா ஈடன்கார்டனில் முதல் ஸ்லிப்பில் நின்ற வீரருடன் பேசுவது கூட கேட்க முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதே போல் தான் வான்கடேயிலும் காணப்பட்டது.

பூவா, தலையா? கேட்பதற்காக இந்திய கேப்டன் டோனி நாணயத்தை மேலே சுண்டி விட்டார். ஆனால் ரசிகர்களின் கரவொலியால் நான் என்ன கேட்டேன் என்பது டோனிக்கு சரியாக கேட்வில்லை.

நான் ‘பூ’ என்று சொன்னதாக அவர் கூறினார். ஆனால் நான் ‘தலை’ தான் கேட்டதாக கூறினேன்.

போட்டி நடுவரும் நான் தான் ‘டாஸ்’ வென்றது போல் கூறினார். ஆனால் டோனி அதை ஏற்கவில்லை.

இதனால் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. பிறகு இன்னொரு முறை ‘டாஸ்’ போடலாமே என்று டோனி சொன்னார்.

இதனால் 2-வது முறையாக ‘டாஸ்’ போடப்பட்டது. அதில் மறுபடியும் நான் கேட்டபடியே ‘தலை’ விழுந்தது. இது என் அதிர்ஷ்டமா என்று தெரியவில்லை.

நான் டாசில் தோற்று இருந்தால் அனேகமாக இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் அரைஇறுதியின் போது காயமடைந்ததால் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது. அது தான் எங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

சரியான கலவையில்அணியை தேர்வு செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்திருந்தால் நாங்கள் முதலில் பந்து வீச்சைத் தான் தேர்ந்தெடுத்திருப்போம்.

அதனால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும் என்று உறுதியாக சொல்லமாட்டேன்.

இருப்பினும் அணியின் கலவையில் சமநிலை ஏற்பட்டிருக்கும். அவர் 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது எங்களுக்கு கூடுதல் பலமாகும்.

இந்த உலக கோப்பை போட்டியை திரும்பி பார்க்கும் போது நீங்கள் கேட்ச்சுகளை தவற விட்டது குறித்து பேசுவீர்கள். அது விளையாட்டில் ஒரு அங்கம்.

ஆனால் என்னை பொறுத்தவரை மேத்யூஸ் விலகலால் ஆடும் லெவனில் செய்யப்பட்ட மாற்றமே திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்வேன் என்று சங்கக்கரா கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker