TAMIL

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்:தமிழக அணியை வீழ்த்தி கர்நாடகா ‘சாம்பியன்’அபிமன்யு மிதுன் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணியை வீழ்த்தி கர்நாடகா 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அபிமன்யு மிதுன் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

விஜய் ஹசாரே கிரிக்கெட்



18-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் தமிழகமும், கர்நாடகமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் தமிழகமும், கர்நாடகமும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த கர்நாடக கேப்டன் மனிஷ்பாண்டே, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அவரது கணிப்புபடியே ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபட்டது.

விஜய் டக்-அவுட்

முதலில் பேட் செய்த தமிழக அணியில் தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் (0), அடுத்து வந்த ஆர்.அஸ்வின் (8 ரன்) இருவரும் வேகப்பந்து வீச்சில் விக்கெட்டை தாரை வார்த்தனர். இதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் அபினவ் முகுந்தும், பாபா அபராஜித்தும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். எச்சரிக்கையான அணுகுமுறையை கையாண்ட இவர்கள் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு துரத்தியடித்தனர்.

ஒரு கட்டத்தில் தமிழக அணி 2 விக்கெட்டுக்கு 148 ரன்களுடன் (30.5 ஓவர்) நல்ல நிலையில் இருந்தது. இந்த ஜோடி பிரிந்ததும் தமிழக அணியின் ரன்வேகம் தளர்ந்தது. அபினவ் முகுந்த் 85 ரன்களிலும் (110 பந்து, 9 பவுண்டரி), பாபா அபராஜித் 66 ரன்களிலும் (84 பந்து, 7 பவுண்டரி) வெளியேறினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் (11 ரன்) ஏமாற்றம் அளிக்க தமிழக அணி மறுபடியும் நெருக்கடிக்குள்ளானது. அதன் பிறகு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (38 ரன், 35 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) சற்று தாக்குப்பிடித்து விளையாடினார்.

மிதுனுக்கு பிறந்த நாள் பரிசு

280 ரன்களை நெருங்குவது போல் சென்ற தமிழக அணியின் ஸ்கோரை, வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் வெகுவாக கட்டுப்படுத்தினார். அது மட்டுமின்றி ஆட்டத்தின் 50-வது ஓவரை அவர் வீசியதுடன் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார். அவரது பந்து வீச்சில் ஷாருக்கான் (27 ரன்), முகமது (10 ரன்), முருகன் அஸ்வின் (0) ஆகியோர் வரிசையாக ஒரே மாதிரி ஆப்-சைடுக்கு பந்தை வலுவாக அடிக்க முயற்சித்து கேட்ச் ஆகிப்போனார்கள். ‘லிஸ்ட் ஏ’ வகை கிரிக்கெட்டில் அபிமன்யு மிதுன் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்ப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த முதல் கர்நாடக வீரர் என்ற சிறப்பையும் மிதுன் பெற்றார். அவருக்கு நேற்று 30-வது பிறந்த நாள் ஆகும். பிறந்த நாள் பரிசாக இந்த ஹாட்ரிக் சாதனை அமைந்துள்ளது.

முடிவில் தமிழக அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அபிமன்யு மிதுன் 9.5 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ‘ஹாட்ரிக்’ உள்பட 5 விக்கெட்டுகளும், கவுசிக் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

மழையால் பாதிப்பு

அடுத்து களம் இறங்கிய கர்நாடகா பேட்ஸ்மேன்கள் மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டதால் தொடக்கத்திலேயே வேகமாக ரன் திரட்டுவதில் கவனம் செலுத்தினர். தேவ்தத் படிக்கல் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டுக்கு நுழைந்த மயங்க் அகர்வால் ரன்மழை பொழிந்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

கர்நாடக அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்தது. அப்போது விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் 52 ரன்களுடனும் (72 பந்து, 5 பவுண்டரி), மயங்க் அகர்வால் 69 ரன்களுடனும் (55 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

கர்நாடகா சாம்பியன்

தொடர்ந்து மழை கொட்டியதால், மழை பாதிப்பின் போது உள்ளூர் போட்டிகளுக்கான முடிவை அறிய பயன்படுத்தப்படும் வி.ஜே.டி. விதிமுறை கொண்டு வரப்பட்டது. இதன்படி 23 ஓவர்களில் கர்நாடக அணிக்கு 87 ரன்களே போதுமானதாக இருந்தது. அதனால் அந்த அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் கால்பதித்த தமிழக அணி ஒரே தோல்வியின் மூலம் கோப்பையை இழந்து விட்டது. 5 முறை சாம்பியனான தமிழக அணி இறுதி ஆட்டத்தில் தோற்பது இதுவே முதல் நிகழ்வாகும். அதே சமயம் கர்நாடகா இந்த கோப்பையை உச்சிமுகர்வது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2013-14, 2014-15, 2017-18 ஆகிய ஆண்டுகளிலும் வென்று இருந்தது.

கேப்டன்கள் கருத்து

கர்நாடகா கேப்டன் மனிஷ் பாண்டே கூறுகையில், ‘போட்டியின் முடிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது வீரர்கள், தாங்கள் களம் காணும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையுடன் விளையாடுகிறார்கள். அது தொடரும் என்று நம்புகிறேன்’ என்றார்.

தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘இந்த தொடரில் நாங்கள் மிகச்சிறப்பாக விளையாடினோம். ஒரே ஒரு மோசமான நாளை வைத்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த தொடரில் நாங்கள் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது. இது அடுத்து வரும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மற்றும் ரஞ்சி போட்டிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்கும்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker