Central College JAFLKIPL TAMILSt John's College JAFLK

பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்; தொடர்ச்சியான ஐந்தாவது வெற்றியினை பதிவு செய்த சென். ஜோன்ஸ் கல்லூரி

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி, மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான 18ஆவது ஒரு நாள் போட்டி இன்று சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

பந்துவீச்சாளர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதாக அமைந்த இந்த போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரியினர் 33 ஓட்டங்களால் வெற்றி பெற்று வடக்கின் பெரும் சமரின் ஒரு நாள் போட்டித் தொடரில் தொடர்ச்சியான ஐந்தாவது வருடமாக வெற்றி பெற்றுள்ளனர்.


இன்றைய போட்டியில் மத்திய கல்லூரி அணியினர் பெரும் சமரில் களமிறங்கிய அணியிலிருந்து திவாகரன், கவிதர்சன் ஆகிய வீரர்களிற்கு பதிலாக நியூட்டன், கௌதம் ஆகிய இரு இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியிருந்தனர். மறுபக்கம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி அதே பதினொருவருடன் களமிறங்கியிருந்தது.

போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மத்திய கல்லூரி சென். ஜோன்ஸினை 94 ஓட்டங்களுடன் மட்டுப்படுத்தியது. பந்துவீச்சில் இயலரசன் மற்றும் நிதுசன் தலா மூன்று விக்கெட்டுக்களை சாய்த்தனர். சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் சௌமியன் (16), தனுஜன் (14) மட்டுமே இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக்கையினை பெற்றிருந்தனர். உதிரிகளாக 24 ஓட்டங்களை மத்திய கல்லூரி விட்டுக் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னர், 95 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய மத்தியின் முதலாவது விக்கெட்டினை இரண்டாவது ஓவரிலேயே அபிஷேக் சாய்த்தார். தொடர்ந்தும் அபிஷேக்கின் பந்துவீச்சிற்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்த மத்திய கல்லூரியினர் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.


தொடர்ந்தும் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்ட போதும் ஏழாம் இலக்கத்தில் களமிறங்கிய ராஜ்கிளின்டன் ஓட்டங்களினை சேகரித்து நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். எட்டாவது விக்கெட்டாக 24 ஓட்டங்களோடு ராஜ்கிளின்டனும் ஆட்டமிழக்க மத்தியின் இறுதி நம்பிக்கையும் கைநழுவியது.

தொடர்ந்து, 61 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை மத்திய கல்லூரி அணி பறிகொடுக்க, துடுப்பாட்டத்தில் தடுமாறிய போதும் சென். ஜோன்ஸ் வீரர்கள் சிறந்த பந்துவீச்சினூடாக தொடர்ச்சியான ஐந்தாவது வெற்றியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் பெற்றுக்கொண்டனர்.


போட்டியின் ஆட்ட நாயகனாக 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்த சென். ஜோன்ஸ் கல்லூரியின் அண்டன் அபிஷேக் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

போட்டிச்சுருக்கம்

சென் ஜோன்ஸ் கல்லூரி 94 (36.3) சௌமியன் 16,தனுஜன் 14, நிதுசன் 3/08, இயலரசன் 3/27

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 61 (25.1) ராஜ்கிளின்டன் 24, சாரங்கன் 11, அபிஷேக் 5/20, விதுசன் 2/12, டினோசன் 2/16

போட்டி முடிவு – 33 ஓட்டங்களால் சென் ஜோன்ஸ் கல்லூரி வெற்றி

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker