TAMIL

‘தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக மீண்டும் இருக்க அழைப்பு வந்தது’ – டிவில்லியர்ஸ் தகவல்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

ஆனாலும் அவர் பல்வேறு நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 இருபது ஓவர் போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி இருக்கும் 36 வயதான டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஆனால் அவரது விருப்பத்தை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

தற்போது தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

தென்ஆப்பிரிக்க அணியின் புதிய பயிற்சியாளராக இருக்கும் மார்க் பவுச்சர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ‘டிவில்லியர்ஸ் நல்ல பார்மில் இருப்பதை நிரூபித்தால் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி தேர்வில் கருத்தில் கொள்ளப்படுவார்’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் டிவில்லியர்ஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது:-

‘தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்க தான் செய்கிறது.

மேலும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் வகிக்க முடியுமா? என்று கேட்டது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணிக்கு நான் திரும்ப வேண்டுமென்றால் உயர்வான பார்மில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

அத்துடன் அணியில் இருக்கும் மற்ற வீரர்களை விட நான் சிறப்பாக இருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

அணியில் இடம் பெறுவதற்கு தகுதியான பார்மில் இருப்பதாக நான் உணர்ந்தால் தான், ஆடும் லெவன் அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு என்னால் எளிதாக வர முடியும்.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் நான் சிறிது காலம் இடம் பெறவில்லை.

எனவே தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பெற இன்னும் தகுதியானவர் என்பதை நானும், மற்றவர்களும் உணர வேண்டியது முக்கியமானதாகும்.

தற்போது நம்மை சுற்றி கொரோனா வைரஸ் பிரச்சினை நிலவி வருகிறது.

எனவே வருங்கால போட்டி அட்டவணையில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியவில்லை’.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker