TAMIL

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரோகித் சர்மா 212 ரன்கள் விளாசல்; ரஹானே சதம்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா, தொடக்க நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 117 ரன்களுடனும், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மழையால் முதல் நாளில் 32 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது.



இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் இந்திய பேட்ஸ்மேன்களின் கையே ஓங்கியது. தென்ஆப்பிரிக்காவின் தாக்குதலை அருமையாக சமாளித்த ரோகித்தும், ரஹானேவும் அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு அனுப்பினர். நிகிடியின் ஒரே ஓவரில் ரோகித் சர்மா 3 பவுண்டரிகள் விரட்டியடித்தார். மறுமுனையில் ரஹானே தனது 11-வது சதத்தை பூர்த்தி செய்தார். உள்நாட்டில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

அணியின் ஸ்கோர் 306 ரன்களாக உயர்ந்த போது ரஹானே (115 ரன், 192 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்) லின்டேவின் சுழலில் விக்கெட் கீப்பர் கிளாசெனிடம் கேட்ச் ஆனார். ரோகித்-ரஹானே கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 267 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் நிலைத்து நின்று விளையாட இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மதிய உணவு இடைவேளையின் போது 199 ரன்களுடன் களத்தில் நின்ற ரோகித் சர்மா அதன் பிறகு நிகிடியின் பந்து வீச்சில் தைரியமாக ஒரு சிக்சரை பறக்க விட்டு தனது முதலாவது இரட்டை சதத்தை எட்டினார். அதே ஓவரில் மேலும் ஒரு சிக்சர் அடித்த ரோகித் சர்மா (212 ரன்கள், 255 பந்து, 28 பவுண்டரி, 6 சிக்சர்) ரபடா வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை தூக்கியடித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார்.

இவருக்கு பிறகு வந்த வீரர்களும் துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். இதனால் ரன் ரேட் 4 ரன்களுக்கு மேலாக நகர்ந்தது. ஜடேஜா தனது பங்குக்கு 51 ரன்கள் (119 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார். இறுதி கட்டத்தில் உமேஷ் யாதவின் அதிரடி ரசிகர்களை பரவசப்படுத்தியது. தான் எதிர்கொண்ட முதல் ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் லின்டேவின் பந்து வீச்சில் 2 சிக்சர் தூக்கியடித்த உமேஷ் யாதவ் அவரது இன்னொரு ஓவரிலும் 3 சிக்சர்களை தெறிக்க விட்டு குதூகலப்படுத்தினார். பிறகு அதே ஓவரிலேயே கேட்ச் ஆனார். டெஸ்ட் வரலாற்றில் 30 ரன்களுக்கு மேலான ரன்களை அதிவேகமாக எடுத்த சிறப்புடன் உமேஷ் யாதவ் (31 ரன், 10 பந்து) வெளியேறினார். டெஸ்டில் இது தான் அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.




இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் (ரன்ரேட் 4.26) குவித்து இருந்த போது டிக்ளேர் செய்தது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்டுகளும், ரபடா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா வழக்கம் போல் தடுமாற்றத்திற்கு உள்ளானது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் (0) முகமது ஷமி வீசிய பந்தை அடிப்பதா வேண்டாமா? என்ற குழப்பத்தில் பேட்டை தாமதமாக இழுத்தார். அதற்குள் பந்து அவரது கையுறையில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச்சாக சிக்கியது. மற்றொரு தொடக்க வீரர் குயின்டான் டி காக் (4 ரன்) உமேஷ் யாதவின் பவுன்சர் பந்தில் ஆட்டம் இழந்தார். தென்ஆப்பிரிக்கா 5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சம் இன்மையால ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

உள்நாட்டு போட்டி சராசரியில் பிராட்மேனை முந்தினார், ரோகித் சர்மா

* இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இந்த தொடரில் இதுவரை 529 ரன்கள் குவித்துள்ளார். வினோ மன்கட், புதி குன்ட்ரன், சுனில் கவாஸ்கர் (5 முறை), ஷேவாக் ஆகியோருக்கு பிறகு டெஸ்ட் தொடர் ஒன்றில் 500 ரன்களுக்கு மேல் சேர்த்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆவார். இந்த வகையில் கடைசியாக ஷேவாக் 2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மொத்தம் 544 ரன்கள் எடுத்திருந்தார்.

* முதலாவது டெஸ்டில் மயங்க் அகர்வாலும் (215 ரன்), 2-வது டெஸ்டில் விராட் கோலியும் (254 ரன்), 3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவும் (212 ரன்) இரட்டை சதம் அடித்து உள்ளனர். ஒரு டெஸ்ட் தொடரில் மூன்று இந்திய வீரர்கள் இரட்டை சதம் அடித்திருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

* உள்நாட்டில் ரோகித் சர்மா இதுவரை 6 சதம், 5 அரைசதம் உள்பட 18 இன்னிங்சில் ஆடி 1,298 ரன்கள் (சராசரி 99.84) எடுத்துள்ளார். உள்ளூரில் குறைந்தது 10 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் சிறந்த சராசரியை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இந்த சாதனை பட்டியலில் அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை (சராசரி 98.22) பின்னுக்கு தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

* இந்த தொடரில் இந்தியா இதுவரை 47 சிக்சர்கள் (விசாகப்பட்டினம்-27 சிக்சர், புனே-7, ராஞ்சி-13) நொறுக்கியுள்ளது. இதன் மூலம் ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு மட்டும் 19 சிக்சர் ஆகும். இதற்கு முன்பு 2013-14-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 40 சிக்சர் கிளப்பியதே அதிகபட்சமாக இருந்தது.

* டெஸ்ட், ஒரு நாள் போட்டி இரண்டிலும் இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இருவரும் இந்தியா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோருடன் இப்போது ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார்.

ரஹானேவுக்கு ரோகித் சர்மா புகழாரம்

2 -வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு இரட்டை சத நாயகன் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல் நாளில் 39 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்ததும் நானும், ரஹானேவும் முதல் பகுதியில் எச்சரிக்கையுடன் விளையாடினோம். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ரஹானே உத்வேகத்துடன் ஆடத் தொடங்கினார். ஏதுவான பந்துகளை விரட்டியடித்த அவர் 43 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

ரஹானேவின் ஆட்டத்தை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். எப்போதெல்லாம் அணி கடினமான நிலையில் தவிக்கிறதோ அப்போதெல்லாம் வந்து அணியை காப்பாற்றி இருக்கிறார். பல இன்னிங்சில் இவ்வாறு அணியை தூக்கி நிறுத்தி இருக்கிறார். அவர் எந்த அளவுக்கு மனரீதியாக வலுவாக இருக்கிறார், மோசமான சூழலில் இருந்து அணியை மீட்கும் வேட்கையில் உள்ளார் என்பதையே அவரது பேட்டிங் காட்டுகிறது.

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஊடகத்தினரின் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது தெரியும். இனி என்னை பற்றி சிறப்பாக எழுதுவார்கள். இந்த தொடரில் இருந்து நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும். இந்த ஆட்டத்தை பற்றி சொல்வது என்றால், மிகவும் சவாலான இன்னிங்ஸ்களில் ஒன்றாக இருந்தது. இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker