TAMIL

ஜூனியர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த மாதம் 17-ந்தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது.

s16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் ஆசிய அணிகளான நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.


இந்த நிலையில் போட்செப்ஸ்ட்ரூமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் கோதாவில் குதிக்கின்றன.

நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இந்த நிலையை எட்டியுள்ளன.

பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் வலுமிக்கதாக விளங்கும் பிரியம் கார்க் தலைமையிலான இந்தியாவுக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

அரைஇறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியாவின் நம்பிக்கைக்கு தீனிபோட்டுள்ளது.

நெருக்கடியில் இருந்து விடுபட்டு ரிலாக்ஸ் ஆவதற்காக நெல்சன் மண்டேலா சதுக்கத்துக்கு சென்று நேரத்தை செலவிட்ட இந்திய இளம் வீரர்கள் மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவராக வலம் வரும் தொடக்க ஆட்டக்காரர் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் (ஒரு சதம், 3 அரைசதம்
உள்பட 312 ரன்), திவ்யான்ஷ் சக்சேனா (2 அரைசதத்துடன் 148 ரன்), கேப்டன் பிரியம் கார்க் ஆகியோரைத் தான் இந்திய அணி பேட்டிங்கில் அதிகமாக சார்ந்து இருக்கிறது.


குறிப்பாக நமக்கு தொடக்கம் நேர்த்தியாக அமைந்து விட்டால், எதிரணிக்கு உதறல் தானாகவே வந்து விடும்.

இதே போல் பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ரவிபிஷ்னோய் (13 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் கார்த்திக் தியாகி (11 விக்கெட்), ஆகாஷ் சிங் (7 விக்கெட்) ஆகியோர் கலக்குகிறார்கள்.

ஓவருக்கு சராசரியாக 4-க்கும் குறைவான ரன்களை விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டியுள்ள இவர்கள் இறுதி ஆட்டத்திலும்
தாக்கத்தை ஏற்படுத்தும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே 4 முறை இந்த கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, மீண்டும் மகுடம் சூடினால் அது புதிய உச்சமாக அமையும்.

அக்பர் அலி தலைமையிலான வங்காளதேச அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது.

நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் 212 ரன் இலக்கை சேசிங் செய்து அமர்க்களப்படுத்தியது.

பேட்டிங்கில் மமுதுல் ஹசன் ஜாய் (ஒரு சதத்துடன் 176 ரன்), தன்ஜித் ஹசன் (149 ரன்), ஷகதத் ஹூசைன் (130 ரன்), பந்து வீச்சில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷகிபுல் ஹசன் (11 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் (7 விக்கெட்) ஆகியோர் மிரட்டியுள்ளனர்.


இவர்கள் கைவரிசை காட்டுவதை பொறுத்தே வங்காளதேசத்தின் வெற்றி வாய்ப்பு அமையும்.

உலக கோப்பை போட்டி ஒன்றில் வங்காளதேச அணி இறுதிசுற்றை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

எனவே வெற்றி கண்டால், அது வங்காளதேச அணிக்கு சரித்திர சாதனையாக பதிவாகும்.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே ஜூனியர் உலக கோப்பை போட்டியில் 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.

இதில் 3-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

முன்னதாக நேற்று 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பெனோனியில் மோத இருந்தன. ஆனால் பலத்த
மழையால் மைதானம் வெள்ளக்காடானது.

இதனால் இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.


லீக் சுற்றில் அதிக புள்ளிகளை பெற்றதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணி 3-வது இடத்தை பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.
நியூசிலாந்துக்கு 4-வது இடம் கிடைத்தது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker