TAMIL

ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘சூப்பர் ஓவர்’ முறை தேவையில்லை:ராஸ் டெய்லர் சொல்கிறார்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில், இறுதி சுற்றில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்சில் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 241 ரன்கள் சேர்த்ததால் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க ‘சூப்பர் ஓவர்’ கொண்டு வரப்பட்டது.

இதிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்து சமநிலை ஏற்பட்டதால் அதிக பவுண்டரிகள் விளாசிய அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதனால் இனி உலககோப்பை அரைஇறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் ஸ்கோர் சமன் ஆனால், தெளிவான முடிவு கிடைக்கும் வரை ‘சூப்பர் ஓவர்’ முறை இடைவிடாது பின்பற்றப்படும் என்று விதிமுறையில் ஐ.சி.சி. திருத்தம் செய்தது.

இந்த நிலையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘சூப்பர்ஓவர்’ தேவையில்லை என்று நியூசிலாந்து அணி முன்னணி பேட்ஸ்மேன் 36 வயதான ராஸ் டெய்லர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘ஒரு நாள் கிரிக்கெட் நீண்ட நேரம் விளையாடப்படும்போட்டி.

அதனால் ஆட்டம் டை (சமன்) ஆனாலும், அதே டையுடன் முடித்துக் கொள்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

குறுகிய நேரம் நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சூப்பர் ஓவர் முறையை கடைபிடிப்பது சரியான முடிவு. அதை அப்படியே தொடரலாம். கால்பந்து போன்ற போட்டிகளில் டிராவில் முடிந்தால் குழப்பங்கள் ஏற்படும். அதனால் அந்த விளையாட்டில் வெற்றியை தீர்மானிக்க சில விதிகள் தேவையாக உள்ளது. ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை ‘சூப்பர் ஓவர்’ முறை நிச்சயம் அவசியமில்லை. இறுதிப்போட்டி சமனில் முடிந்தால் இரு அணிகளையும் வெற்றியாளராக அறிவித்து கோப்பையை பகிர்ந்து கொள்ளலாம்’ என்றார்.

மேலும் டெய்லர் கூறுகையில், ‘2019-ம் ஆண்டு உலககோப்பை இறுதிப்போட்டி சமனில் முடிந்ததும் நடுவர்களிடம் சென்று நல்ல ஆட்டம் என்று பரவசத்தோடு கூறினேன். அப்போது கூட ‘சூப்பர் ஓவர்’ முறை உண்டு என்பது தெரியாது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தால் அது டை தான். முடிவை மாற்றக்கூடாது. அந்த உலக கோப்பையை கூட்டாக இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுத்திருக்கலாம். 100 ஓவர்கள் தொடர்ந்து விளையாடியும் சமனில் முடிந்தால், அது ஒன்றும் மோசமான முடிவு அல்ல’ என்றார்.

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் நியூசிலாந்து அணி இதுவரை 8 ஆட்டங்களில் சூப்பர் ஓவரில் விளையாடி அதில் 7-ல் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker