TAMIL

ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர்: சங்கக்கரா பேட்டி

சர்வதேச கிரிக்கெட் கவுன்லின் (ஐ.சி.சி.) தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்ததால், அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை துணைத்தலைவர் இம்ரான் கவாஜா (ஹாங்காங்) இடைக்கால தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஐ.சி.சி.யின் தலைவர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சேர்மன் காலின் கிராவ்ஸ் முன்னணியில் இருக்கிறார்.

அதே சமயம் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியை ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குனர் கிரேமி சுமித் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கராவும் கங்குலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சங்கக்கரா அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று கருதுகிறேன். நான் கங்குலியின் தீவிரமான ரசிகர்.

ஒரு கிரிக்கெட் வீரர் என்பதற்காக மட்டுமல்ல.

அவர் கிரிக்கெட் அறிவு மிக்கவர். புத்திசாலித்தனமானவர். கிரிக்கெட் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் எண்ணம் அவரது மனதில் உண்டு.

ஐ.சி.சி. தலைவர் பொறுப்புக்கு வரும் போது சர்வதேச அளவில் முற்றிலும் பரந்த மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், இந்தியரா, இலங்கை நாட்டவரா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரா என்ற எண்ணம் இல்லாமல் பாரபட்சமின்றி செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

நான் ஒரு கிரிக்கெட் வீரர். கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும், கிரிக்கெட் விளையாடும் அணிகளின் நலனுக்கும் என்ன தேவையோ அதை செய்வேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அது எந்த நிலையிலும் மாறக்கூடாது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பே கங்குலியின் செயல்பாட்டை நான் பார்த்து இருக்கிறேன்.

உலக அளவில் கிரிக்கெட் வீரர்களுடன் உறவை எப்படி வலுப்படுத்தினார் என்பதை அவர் எம்.சி.சி. கமிட்டி உறுப்பினராக இருந்த போது கவனித்துள்ளேன்.

எனவே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு அவர் மிகவும் கச்சிதமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

அவர் ஐ.சி.சி. தலைவராக பதவி ஏற்றால், நிச்சயம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன்’ என்றார்.

இதற்கிடையே, சவுரவ் கங்குலி 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நீடிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

‘கங்குலியும், அவரது சகாக்களும் இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பில் 2023-ம் ஆண்டு வரை தொடர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால் இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு என்ன முடிவு செய்கிறது என்பதை பார்க்கலாம். இந்திய கிரிக்கெட் மோசமான நிலையில் தத்தளித்த போது அதை தூக்கி நிறுத்தி, ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொண்டு வந்தவர் கங்குலி. இதே போல் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திலும் திறம்பட பணியாற்றுவார் என்று நம்புகிறேன்’ என்றும் கவாஸ்கர் குறிப்பிட்டார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker