TAMIL

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் – கவுகாத்தியில் இன்று நடக்கிறது

மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இதில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.

இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் முதல் போட்டி இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.



கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இந்த ஆண்டிலும் அசத்தும் என்று நம்பலாம்.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணியை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு இந்த போட்டி தொடர் ஒரு படிக்கட்டாக பார்க்கப்படுகிறது.

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் இடம் இறுதி செய்யப்பட்டுவிட்டாலும், ஒரு சில இடங்களுக்கு

யாரை தேர்வு செய்வது என்பதை அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

எனவே வீரர்கள் தங்கள் இடத்தை உறுதி செய்ய இந்த போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்.

இந்த போட்டி தொடரில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ஷிகர் தவான் அணிக்கு திரும்பி இருக்கிறார்.



ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள்.

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தீபக் சாஹர், புவனேஷ்வர்குமார் ஆகியோர் காயம் காரணமாக
அணியில் இடம் பெறவில்லை.

முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 மாத இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.

உள்ளூர் போட்டியில் விளையாடாமல் நேரடியாக அணிக்குள் நுழைந்துள்ள பும்ரா பந்து வீச்சில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருடன் இணைந்து ஷர்துல் தாகூர் வேகப்பந்து வீச்சை தொடுப்பார்.

ஆல்-ரவுண்டரில் வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஒரு ரன் எடுத்தாலே சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

தற்போது இந்திய வீரர்கள் விராட்கோலி (75 போட்டியில் 2,633 ரன்கள்), ரோகித் சர்மா (104 போட்டியில் 2,633 ரன்கள்) ஆகியோர் சமநிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இலங்கை அணியில் பேட்டிங்கில் குசல் பெரேரா, மேத்யூஸ், பானுகா ராஜபக்சே, ஒஷாடா பெர்னாண்டோ, குணதிலகா ஆகியோர் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள்.

கேப்டன் மலிங்கா வேகப்பந்து வீச்சில் எதிரணிக்கு சவால் அளிப்பதில் வல்லவர்.

சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்கா உள்ளிட்ட சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி கடைசியாக நடந்த வங்காளதேசம் (2-1), வெஸ்ட்இண்டீஸ் (2-1) அணிகளுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியது.

இலங்கைக்கு எதிரான தொடரையும் வென்று தனது வெற்றிப் பயணத்தை தொடர இந்திய அணி ஆர்வம் காட்டும்.

இலங்கை அணி கடைசியாக ஆடிய இரண்டு 20 ஓவர் போட்டி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. 0-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.

இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 16 இருபது ஓவர் போட்டியில் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 11 ஆட்டத்திலும், இலங்கை அணி 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இரு அணிகளும் இன்று சந்திப்பது 17-வது போட்டியாகும். கவுகாத்தி பார்சாபாரா ஸ்டேடியத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டி அரங்கேறி இருக்கிறது.

2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.



அந்த போட்டி முடிந்து ஓட்டல் அறைக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய அணியினர் சென்ற பஸ் மீது ரசிகர்கள் கல்வீசி தாக்கியது நினைவிருக்கலாம்.

தற்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் வீரர்கள் தங்கும் ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போட்டியை காண செல்லும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பேனர், அட்டை, மார்க்கர் உள்ளிட்ட பொருட் களை மைதானத்துக்குள் ரசிகர்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர்.



இலங்கை: குணதிலகா, ஒஷாடா பெர்னாண்டோ, அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, குசல் பெரேரா, மேத்யூஸ், தசுன் ஷனகா, இசுரு உதனா, வானிந்து ஹசரங்கா, மலிங்கா (கேப்டன்), லாஹிரு குமாரா அல்லது கசுன் ரஜிதா.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker